திட்டுவிளையில் சாலையை சீரமைக்க கோரி தி.மு.க.வினர் மறியல்


திட்டுவிளையில் சாலையை சீரமைக்க கோரி தி.மு.க.வினர் மறியல்
x
தினத்தந்தி 19 Nov 2019 11:00 PM GMT (Updated: 19 Nov 2019 8:03 PM GMT)

திட்டுவிளையில் சாலையை சீரமைக்க கோரி தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஆஸ்டின் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பூதப்பாண்டி,

நாகர்கோவில் நகருக்கு புத்தன் அணையில் இருந்து குடிநீர் எடுத்து வருவதற்காக நெடுஞ்சாலை ஓரம் பள்ளம் தோண்டப்பட்டு ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்தது. அவ்வாறு குழாய்கள் பதிக்கப்பட்ட பகுதிகளில் மண்ணை நிரப்பி மண் மேடாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் அரசு பஸ், டெம்போ, கார் போன்ற வாகனங்கள் மண் மேட்டில் புதையும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. அத்துடன், அடிக்கடி வாகன நெருக்கடி ஏற்படுகிறது.

இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி நேற்று திட்டுவிளை சந்திப்பில் தி.மு.க.வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ. ஆஸ்டின் தலைமை தாங்கினார். தோவாளை ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன், ஒன்றிய முன்னாள் தலைவர் பூதலிங்கம், பூதப்பாண்டி பேரூர் தி.மு.க. தலைவர் சுந்தர், செயலாளர் ஆலிவர்தாஸ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் அசோக், உதவி பொறியாளர் கிருஷ்ணகுமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் பாக்கியராஜ், நிர்வாக உதவி பொறியாளர் கோபாலகிருஷ்ணன், பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, குழாய் பதிக்கும் பணி முடிந்த நிலையில், 5 கிலோ மீட்டர் சாலை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணி 15 தினங்களுக்குள் முடிக்கப்படும் என்றும், மீதமுள்ள பகுதி விரைவில் சீரமைக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story