வாகன சோதனையின்போது மோட்டார்சைக்கிள் மோதி காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.75 ஆயிரம் வழங்க வேண்டும் விபத்தை ஏற்படுத்தியவருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


வாகன சோதனையின்போது மோட்டார்சைக்கிள் மோதி காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.75 ஆயிரம் வழங்க வேண்டும் விபத்தை ஏற்படுத்தியவருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 Nov 2019 4:15 AM IST (Updated: 20 Nov 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

வாகன சோதனையின்போது மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு, மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர் ரூ.75 ஆயிரம் வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் போலீஸ் நிலையத்தில் ரமேஷ்குமார் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் மற்றும் சில போலீசாரும் கடந்த மாதம் 28-ந்தேதி முப்புலிவெட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தெற்கு பரும்பூரை சேர்ந்த கண்ணன் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவருடன் கணேசன் என்பவர் பின்னால் அமர்ந்திருந்தார். அவர்களை போலீசார் மறித்தனர். இதனால் அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்த கண்ணன் முயன்றார். ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். கண்ணன், கணேசனும் காயம் அடைந்தனர். பின்னர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

மேல் சிகிச்சைக்காக சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் நாகர்கோவில் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் என் மீது மோட்டார் சைக்கிளை குடிபோதையில் இருந்த கண்ணன் மோதச்செய்தார் என சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் ஓட்டப்பிடாரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கண்ணன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், “சப்-இன்ஸ்பெக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது தற்செயலாக நடந்த விபத்து தான். இதில் எந்த உள்நோக்கமும் மனுதாரருக்கு இல்லை. அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதாடினார்.

அப்போது சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமாருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வகையில் ரூ.3 லட்சத்துக்கும் மேலாக செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையை வழங்க உரியவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.

இதுகுறித்து அரசு வக்கீலிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.அதற்கு அரசு வக்கீல், “பணியில் இருந்த போது படுகாயம் ஏற்பட்டால், சிகிச்சைக்கான செலவை காவல் துறை தான் ஏற்க வேண்டும்” என்றார்.

முடிவில், காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமாரின் சிகிச்சை செலவுத்தொகை அனைத்தையும் தமிழக காவல்துறை ஏற்க வேண்டும். அவர் சொந்தமாக செலவு செய்திருந்தால் அந்த தொகையை திருப்பி செலுத்த வேண்டும். இந்த வழக்கில் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் ரூ.75 ஆயிரத்துக்கான வரைவோலையை எடுத்து, அதை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமாரிடம் வழங்க வேண்டும். மனுதாரர் மீதான வழக்கில் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 308-ஐ நீக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story