வாணாபுரம் அருகே குரங்கு தொல்லையால் மாணவர்கள் அவதி வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


வாணாபுரம் அருகே குரங்கு தொல்லையால் மாணவர்கள் அவதி வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 19 Nov 2019 9:38 PM GMT (Updated: 19 Nov 2019 9:38 PM GMT)

வாணாபுரம் அருகே குரங்கு தொல்லையால் மாணவ-மாணவிகள் அவதியடைந்துள்ளனர்.

வாணாபுரம்,

வாணாபுரம் அருகே உள்ள குங்கிலிய நத்தத்தில் கள்ளக்குறிச்சி சாலை, திருவண்ணாமலை சாலை, கோவில் தெரு, தென்கரும்பலூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள வனப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் வந்தது. தற்போது இனப்பெருக்கம் செய்து 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. இந்த குரங்குகள் வீடுகளில் அங்குமிங்கும் தாவியும் வீட்டில் உள்ள பொருட்களை சேதம் செய்வது மட்டுமல்லாமல் அசுத்தமும் செய்து வருகிறது.

பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் எடுத்து வரும் தின்பண்டங்கள் மற்றும் உணவுப் பொருள்களை எடுத்து சேதம் செய்வது மட்டுமல்லாமல் அவ்வப்போது கடித்து வருகிறது. இதனால் கடந்த சில தினங்களாக மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர்.

குங்கிலியநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட வேண்டுமென்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு குரங்குகளைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story