‘யூ.டி.எஸ்.’ செயலி மூலம் எளிதாக டிக்கெட் எடுக்க பயன்படும் ‘கியூ.ஆர்.கோடு’ சுவரொட்டிகள் கிழிப்பு


‘யூ.டி.எஸ்.’ செயலி மூலம் எளிதாக டிக்கெட் எடுக்க பயன்படும் ‘கியூ.ஆர்.கோடு’ சுவரொட்டிகள் கிழிப்பு
x
தினத்தந்தி 19 Nov 2019 10:06 PM GMT (Updated: 19 Nov 2019 10:06 PM GMT)

‘யூ.டி.எஸ்.’ செயலி மூலம் எளிதாக டிக்கெட் எடுக்க பயன்படும் ‘கியூ.ஆர்.கோடு’ சுவரொட்டிகள் ரெயில் நிலைய கவுண்ட்டர்கள் அருகே கிழிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ரெயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளை ரெயில்வே வாரியம் எடுத்து வருகிறது. அந்த வகையில் முன்பதிவற்ற டிக்கெட் களை வாங்க யூ.டி.எஸ். செயலியை அறிமுகம் செய்தது. மேலும் பயணிகளின் கூடுதல் வசதிக்காக மின்சார ரெயில்களுக்கான டிக்கெட்கள் எடுக்கவும் அதில் வசதிகள் செய்யப்பட்டது.

மின்சார ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்துவிட்டு, டிக்கெட் பரிசோதகர்களின் சோதனையின்போது, ரெயிலிலோ அல்லது ரெயில் நிலைய வளாகத்திலோ பயணிகள் டிக்கெட் எடுக்க கூடாது என்பதற்காக, தண்டவாள பகுதிகளிலும் ரெயில் நிலைய வளாகத்திலும் யூ.டி.எஸ். செயலி மூலம் டிக்கெட் எடுப்பதை, நவீன தொழில்நுட்பம் மூலம் ரெயில்வே துறை தடை செய்திருந்தது. இதனால் அவசரமாக ரெயில் நிலையம் வரும் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று கவுண்ட்டர்கள் டிக்கெட் எடுக்கும் நிலை ஏற்பட்டது.

‘கியூ.ஆர்.கோடு’ பதாகை

இந்த நிலையை குறைக்க ரெயில் நிலையங்களின் டிக்கெட் கவுண்ட்டர்கள் அருகே யூ.டி.எஸ். செயலி மூலம், ‘கியூ.ஆர்.கோடு’ வசதியை பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும் வசதியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெற்கு ரெயில்வே அறிமுகம் செய்தது. இதையடுத்து சென்னையில் உள்ள அனைத்து ரெயில் நிலைய வளாகத்திலும் ‘கியூ.ஆர்.கோடு’ அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை ஆங்காங்கே ஒட்டியது. இந்த வசதியை பயணிகள் பலர் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் கடந்த சில நாட்களாக ரெயில் நிலையங்களில் ‘கியூ.ஆர்.கோடு’ அச்சிடப்பட்ட பதாகைகள் கிழிந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் மீண்டும் கவுண்ட்டர்களில் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ‘கியூ.ஆர்.கோடு’ அச்சிடப்பட்ட பதாகைகளை, ரெயில் நிலையங்களில் டிக்கெட் வினியோகிக்கும் எந்திரத்தில் உள்ளவர்கள் தான் சேதப்படுத்துகின்றனர் என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இந்த பதாகைகளை மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தனர்.

Next Story