ஆட்டோவில் கஞ்சா விற்ற 3 பேர் பிடிபட்டனர் ‘மொபைல் சர்வீஸ்’ போல் செய்து வந்தது அம்பலம்


ஆட்டோவில் கஞ்சா விற்ற 3 பேர் பிடிபட்டனர் ‘மொபைல் சர்வீஸ்’ போல் செய்து வந்தது அம்பலம்
x
தினத்தந்தி 19 Nov 2019 10:15 PM GMT (Updated: 19 Nov 2019 10:08 PM GMT)

வண்ணாரப்பேட்டையில் ஆட்டோவில் கஞ்சாவை மறைத்து வைத்து வாடிக்கையாளர்களுக்கு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பூர்,

சென்னை வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி உத்தரவின்பேரில், தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு வண்ணாரப்பேட்டை சிமெண்ட் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆட்டோ ஒன்று அதே பகுதியில் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்துள்ளது. இதனை கண்டு சந்தேகமடைந்த தனிப்படை போலீசார் அந்த ஆட்டோவை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், ஆட்டோவில் இருந்த டிரைவர் உள்பட 3 பேர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, ஆட்டோவில் போலீசார் சோதனை செய்தபோது, அதில் 3 கிலோ கஞ்சாவினை 100 கிராம் பொட் டலங்களாக மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது.

3 பேர் கைது

அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், திருவொற்றியூரைச் சேர்ந்த குள்ளராஜா (வயது 28), புளியந்தோப்பை சேர்ந்த சுதாகர் (27), மணலியை சேர்ந்த கருப்பு உதயா (25) என்பது உறுதியானது.

மேலும் இவர்கள் ஆட்டோவில் கஞ்சாவை வைத்து வாடிக்கையாளர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ‘மொபைல் சர்வீஸ்’ போல் விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதைத்தொடர்ந்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Next Story