வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மயிலாப்பூர் தாசில்தார் கைது


வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மயிலாப்பூர் தாசில்தார் கைது
x
தினத்தந்தி 20 Nov 2019 4:15 AM IST (Updated: 20 Nov 2019 3:44 AM IST)
t-max-icont-min-icon

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சென்னை மயிலாப்பூர் தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை மயிலாப்பூர் தாசில்தாராக பணியாற்றியவர் சுப்பிரமணி (வயது 45). இவர் மீது ஏராளமான லஞ்ச புகார்கள் வந்தன. இந்தநிலையில் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகம் சென்றார். அப்போது அவரிடம் தாசில்தார் சுப்பிரமணி ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ரவிச்சந்திரன் இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

கையும், களவுமாக பிடித்தனர்

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின்படி ரவிச்சந்திரன் நேற்று பிற்பகலில் தாசில்தார் அலுவலகம் சென்றார். அப்போது தாசில்தார் சுப்பிரமணியை சந்தித்து லஞ்ச பணத்தில் 10 ஆயிரத்தை முன்பணமாக கொடுத்ததாக தெரிகிறது.

அப்போது அங்கு மாறுவேடத்தில் மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தார் சுப்பிரமணியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த லஞ்ச பணம் 10 ஆயிரத்தை கைப்பற்றினர். பின்னர் அவரது வீட்டிலும் சோதனை நடந்ததாக தெரிகிறது.

தாசில்தார் சுப்பிரமணி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறினர்.

Next Story