சென்னை மாநகரில் நடைபாதைகளில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


சென்னை மாநகரில் நடைபாதைகளில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 Nov 2019 4:30 AM IST (Updated: 20 Nov 2019 3:47 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகரில் நடைபாதைகளில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை முழுவதும் நடைபாதைகளில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வந்தனா ஷக்காரியா என்ற பெண் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர், ஐகோர்ட்டுக்கு எதிரே உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலை நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்தும், அங்கு பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில் குறித்தும் கேள்வி எழுப்பினர். ஆனால், கோர்ட்டில் ஆஜரான மாநகராட்சி அதிகாரி சரியான பதிலை தெரிவிக்கவில்லை. இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

கோவில் இடிப்பு

இந்த நிலையில், நீதிபதிகள் முன்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் ஆஜராகி, ‘ஐகோர்ட்டுக்கு எதிரே அரண்மனைக்காரன் தெருவில் சாலையை ஆக்கிரமித்து கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்கு முன்பு பழச்சாறு கடை உள்ளது. இந்த கடைக்கு கோவிலில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டது. இதையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. வருகிற வெள்ளிக்கிழமைக்குள் அந்த கோவில் இடித்து அப்புறப்படுத்தப்படும்’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் நடைபாதைகளை ஆக்கிரமித்து மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படுவது, வியாபாரிகள் கடைகளை போடுவது குறித்து கேள்வி எழுப்பினர்.

அடுக்குமாடி வாகன நிறுத்தம்

அதற்கு பதில் அளித்த ஆணையர், ‘நடைபாதை வியாபாரிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படையில் சென்னையில் 40 ஆயிரம் நடைபாதை வியாபாரிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. எந்த பகுதியில் அவர்களுக்கு முழுநேர அனுமதி வழங்கலாம்?, எந்த பகுதியில் பகுதிநேரமாக அனுமதி வழங்கலாம்? என்பது குறித்து திட்டம் தீட்டி வருகிறோம். இத்திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்.

சென்னை பாண்டி பஜாரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் நடைபாதை விஸ்தரிக்கப்பட்டு உள்ளது. அங்கு நடைபாதையை பராமரிக்கவும், நடைபாதை வாகன நிறுத்தம் மற்றும் வியாபாரத்தை தடுக்கும் பொறுப்பு தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்துக்கு 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் 11 லட்சம் 4 சக்கர வாகனங்களும், 64 லட்சம் இருசக்கர வாகனங்களும் உள்ளன. இதை கருத்தில் கொண்டு சென்னை பிராட்வே பகுதியில் முதலில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்ட உள்ளோம். இந்த இடம் உள்பட 65 இடங்களில் ரூ.550 கோடி செலவில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டப்பட உள்ளது’ என்று கூறினார்.

அப்புறப்படுத்த வேண்டும்

பின்னர் தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச்.அரவிந்த்பாண்டியன், மாநகராட்சி தரப்பில் வக்கீல் கே.சவுந்திரராஜன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். நடைபாதை வியாபாரிகள் சார்பில் ஆஜரான வக்கீல் நாக சைலா, ‘நடைபாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக பல வழக்குகள் தொடரப்படுகின்றன. ஆனால், அந்த வழக்குகளில் நடைபாதை வியாபாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்த்து, அவர்களது கருத்துக்களை கேட்பதில்லை. பலருக்கு இன்னமும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை’ என்று வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘சென்னை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து என்.எஸ்.சி. போஸ் சாலை மட்டுமின்றி, சென்னை மாநகரம் முழுவதும் நடைபாதைகளில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் உள்ள நடைபாதை வியாபாரிகள் கணக்கெடுப்பு குறித்தும் கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

பின்னர் வழக்கு விசாரணையை டிசம்பர் 18-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Next Story