மருத்துவ தேவைகளுக்கு: பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம் - ஐகோர்ட்டில், ரிசர்வ் வங்கி தகவல்


மருத்துவ தேவைகளுக்கு: பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம் - ஐகோர்ட்டில், ரிசர்வ் வங்கி தகவல்
x
தினத்தந்தி 20 Nov 2019 5:36 AM IST (Updated: 20 Nov 2019 5:36 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ தேவைகளுக்கு பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம் என மும்பை ஐகோர்ட்டில் ரிசர்வ் வங்கி அறிக்கை தாக்கல் செய்தது.

மும்பை,

மும்பையை தலைமையிடமாக கொண்டு பி.எம்.சி. வங்கி செயல்பட்டு வந்தது. அதிக அளவில் முறைகேடுகள் நடந்ததாக கூறி கடந்த செப்டம்பர் மாதம் 23-ந்தேதி பி.எம்.சி. வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி முடக்கியது.

ஆரம்பத்தில் பி.எம்.சி. வாடிக்கையாளர்கள் அவர்களது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1,000 வரை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டனர். அந்த தொகை படிப்படியாக ரூ.50 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது.

இதற்கிடையே பி.எம்.சி. வங்கி செயல்பாடுகள் முடக்கப்பட்டது தொடர்பான மனு மீதான விசாரணை மும்பை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று ரிசர்வ் வங்கி சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் அவசர மருத்துவ தேவைகளுக்காக ரூ.1 லட்சம் வரை அவர்களது வங்கிக்கணக்கில் இருந்து எடுத்து கொள்ளமுடியும். இதற்காக அவா்கள் ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட பி.எம்.சி. வங்கியின் நிர்வாகியை அணுக வேண்டும்.

இதேபோல திருமணம், கல்வி, வாழ்வாதாரம் போன்ற மற்ற தேவைகளுக்கு ரூ.50 ஆயிரம் வரை பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் அவர்களது வங்கிக்கணக்கில் இருந்து எடுத்து கொள்ளலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story