சென்னை விமான நிலையத்தில் பாங்காக் விமானத்தில் திடீர் கோளாறு 277 பேர் உயிர் தப்பினர்


சென்னை விமான நிலையத்தில் பாங்காக் விமானத்தில் திடீர் கோளாறு 277 பேர் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 20 Nov 2019 10:30 PM GMT (Updated: 20 Nov 2019 5:46 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதைக்கு சென்ற விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. விமானி உடனடியாக கண்டுபிடித்ததால் 277 பேர் உயிர் தப்பினர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு விமானம் செல்ல தயாராக இருந்தது. அதில் 268 பயணிகளும், 9 விமான ஊழியர்களும் இருந்தனர். நடைமேடையில் இருந்து விமானத்தை ஓடுபாதைக்கு சிறிது தூரம் விமானி இயக்கினார்.

அப்போது திடீரென விமானத்தில் எந்திரக்கோளாறு ஏற்பட்டு இருந்ததை கண்டுபிடித்த விமானி, உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து இழுவை வாகனம் மூலம் விமானம் மீண்டும் நடைமேடைக்கு கொண்டுவந்து நிறுத்தப்பட்டது.

உயிர் தப்பினர்

விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறை சரிசெய்யும் பணியில் என்ஜினீயர்கள் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக கோளாறை சரிசெய்ய முடியவில்லை. இதையடுத்து விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

விமானத்தில் எந்திரக்கோளாறு சரிசெய்யப்பட்ட பிறகு நாளை(அதாவது இன்று) அதிகாலை அந்த விமானம் தாய்லாந்து புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்துவிட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் 277 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

இன்னொரு விமானம்

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்துக்கு கோவையில் இருந்து விமானம் வந்தது. 169 பயணிகளும், 5 விமான ஊழியர்களும் அதில் வந்தனர். சென்னை விமான நிலைய வான் எல்லையில் நடுவானில் விமானம் பறந்து வந்தபோது, விமானத்தின் வால் பகுதியில் புகை வருவதாக திடீரென எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இதைக்கண்ட விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

விமான நிலையத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையடுத்து சென்னையில் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் இன்றி விமானத்தை விமானி தரை இறக்கினார். விமானத்தில் இருந்த பயணிகளும், ஊழியர்களும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர்.

இதையடுத்து விமானத்தின் வால் பகுதியில் புகை வந்ததா? அல்லது புகை வருவதற்கான அலாரம் ஒலித்தது ஏன்? என்று விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story