அ.தி.மு.க. அரசை கண்டித்து கடலூரில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் - 4 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு


அ.தி.மு.க. அரசை கண்டித்து கடலூரில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் - 4 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 22 Nov 2019 4:15 AM IST (Updated: 21 Nov 2019 6:33 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. அரசை கண்டித்து கடலூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 4 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

கடலூர்,

தமிழக உரிமையை பாதிக்கும் தென் பெண்ணையாறு திட்டங்களை தடுத்து நிறுத்துவதில் தோல்வி கண்டுள்ள அ.தி.மு.க. அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் 5 மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்து இருந்தது.

அதன்படி கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கான அரசாக செயல்பட்டு வருகிறதா? என்பது அனைவரின் மத்தியிலும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி ஆசீர்வாதத்தால் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடைபெற்று வருகிறது.

கர்நாடகாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருவதால், அவர்களுக்கு ஆதரவாக தடுப்பணைகள் கட்ட தமிழக அரசு உடந்தையாக இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே இவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.

வருகிற உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. பொதுப்பணித்துறையை கையில் வைத்திருக்கும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரியான வக்கீல்கள் வைத்து இந்த வழக்கில் வாதாடவில்லை. ஆகவே அவர் தனது முதல்–அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் துரை.கி.சரவணன், சபா. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அரசை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாவட்ட அவை தலைவர் து.தங்கராசு, முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன், வி.ஆர்.அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம், சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி, காசிராஜன், சுப்புராம், முத்துபெருமாள், ராயர், திருமாவளவன், மனோகர், நகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, நகர பொருளாளர் சலீம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் நடராஜன், மாவட்ட மாணவரணி பாலாஜி, அகஸ்டின் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன் உள்பட கட்சி நிர்வாகிகள் திரளானோர் கொட்டும் மழையிலும் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் ராஜா நன்றி கூறினார்.

Next Story