வடலூர் அருகே, டெங்கு காய்ச்சலுக்கு டிரைவர் பலி - உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
வடலூர் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட டிரைவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அதிகாரிகளை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வடலூர்,
வடலூர் அடுத்த தென்குத்து கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 30). டிரைவர். இவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் வடலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கேயும் குணமாகாததை தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மணிகண்டன் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது ரத்தமாதிரியை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரை தீவிர கண்காணிப்பில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.
அப்போது அங்கிருந்த உறவினர்கள் கதறி அழுதனர். இந்த நிலையில் நேற்று மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் தென்குத்து கிராம மக்கள் வடலூர் அடுத்த ஆபத்தாரணபுரம் பஸ் நிறுத்தம் அருகே ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள், தென்குத்து பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை சரியான முறையில் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரையும் அகற்றவில்லை. இதன் காரணமாக கொசுக்கள் அதிகஅளவில் உற்பத்தியாகி உள்ளது. இதனால் தான் டெங்கு காய்ச்சலால் மணிகண்டன் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார் என குற்றம்சாட்டினர். தொடர்ந்து குப்பைகளை சரியான முறையில் அள்ளி அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து அவர்கள் அங்குள்ள கும்பகோணம்-சென்னை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் குறிஞ்சிப்பாடி தாசில்தார் கீதா மற்றும் வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் கீதா தெரிவித்தார்.
அதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே தாசில்தார் கீதா, தென்குத்து கிராமத்தில் மேற்கொண்டு டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ளவும், பொது மருத்துவ முகாம் நடத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story