கோவையில், அரசு விழாவில் பங்கேற்க சென்ற தி.மு.க. எம்.எல்.ஏ. தடுத்து நிறுத்தம் - இருகட்சியினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
கோவையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க சென்ற தி.மு.க. எம்.எல்.ஏ. நா.கார்த்திக் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது அ.தி.மு.க.-தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை,
கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வரதராஜபுரம் மாநகராட்சி பள்ளியில் முதல்-அமைச்சர் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
இந்த நிலையில் சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. நா.கார்த்திக் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கோரிக்கை மனுக்களுடன் முகாம் நடைபெறும் இடத்துக்கு சென்றனர். முகாம் நடக்கும் இடத்திற்கு சிறிது தூரத்தில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது அவர், எனது தொகுதியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க எம்.எல்.ஏ.வான எனக்கே தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறினார்.
அப்போது அ.தி.மு.க.வினரும் அந்த பகுதிக்கு திரண்டு வந்ததால் இருகட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கோவை நகர சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் தி.மு.க. எம்.எல்.ஏ.விடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.
அரசு அதிகாரிகள் தவறான தகவல்களை சொல்வதாகவும், இதனை கண்டிப்பதாகவும் கூறிவிட்டு எம்.எல்.ஏ. கார்த்திக் அங்கிருந்து சென்றார். இதனால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை மாவட்ட நிர்வாகம் அரசு விழாக்களுக்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வுக்கு முறையாக அழைப்பு விடுப்பதில்லை. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களை மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்கி இருக்கின்றேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கோவையில் முறையான குடிநீர் வசதி இல்லை. சாலை, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் அ.தி.மு.க. அரசு மக்களை இழுத்தடித்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் வருகின்றது என்றவுடன் தற்போது குறைதீர்ப்பு கூட்டத்தை நடத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story