மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனதும், திருமாநிலையூர் புதிய பஸ் நிலைய பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படும் - வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. பேச்சு


மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனதும், திருமாநிலையூர் புதிய பஸ் நிலைய பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படும் - வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 22 Nov 2019 3:45 AM IST (Updated: 22 Nov 2019 12:04 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனதும் கரூர் திருமாநிலையூரில் புதிய பஸ் நிலைய பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படும் என வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

கரூர், 

கரூர் நகரில் உள்ள பஸ் நிலையம் இடநெருக்கடியாக உள்ளதால், கருப்பம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் கிராமத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை நிறைவேற்றாத அ.தி.மு.க. அரசை கண்டித்தும், உடனடியாக புதிய பஸ் நிலையம் அமைக்க வலியுறுத்தியும் கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று காலை 8.30 மணியளவில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

இதற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- திருமாநிலையூரில் பஸ் நிலையம் அமைக்கப்படுகிறபோது கரூர் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்டவற்றுக்கு எளிதாக செல்ல முடியும். அங்கிருந்து கரூர் நகர், ரெயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல பஸ்கள் இயக்கலாம். நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, அரசாணை வெளியிடப்பட்டு புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கையை தொடங்கியபோது, கோர்ட்டை நாடி அதனை தடுக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு, புதிய பஸ் நிலையம் அமைக்க உத்தரவிட்டும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

கரூர் நகரில் டெக்ஸ்டைல் ஜவுளி, கொசுவலை, பஸ்பாடி உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகள்-வணிக நிறுவனங்களில் பலர் வேலை செய்து வருகின்றனர். காலை, மாலை வேளையில் மனோகரா கார்னர் வழியாக அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் பஸ் நிலையத்திலிருந்து பஸ்கள் செல்ல நெருக்கடி ஏற்படுகிறது. மக்களின் சிரமங்களை புரிந்து கொள்ள முடியாத அரசாக தான் எடப்பாடி பழனிசாமி அரசு இருக்கிறது. அரசு பணத்தை விரயம் செய்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட மட்டும் திருமாநிலையூரில் உள்ள அந்த இடத்தை பயன் படுத்தினர். ஆனால் புதிய பஸ் நிலையம் கொண்டுவர தயங்குவது ஏன்?. ரூ.700 கோடியில் சாயப்பூங்கா அமைப்பது, நாரதகானசபா அருகே நகராட்சி திருமண மண்டபத்தை திறக்காமல் இருப்பது, கோயம்பள்ளி-அமராவதி ஆற்று பால பணியை கிடப்பில் போட்டது உள்ளிட்ட பணிகள் நீண்ட காலமாக முடங்கியுள்ளன. குடிமராமத்து திட்டத்தின்கீழ் கரூரில் எவ்வளவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்து பட்டியல் கேட்டால் தர மறுக்கிறார்கள். ஆனால் 434 குளம் தூர்வாரப்பட்டதாக வாய்மொழியாக கூறுகிறார்கள்.

வருகிற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி உறுதி. அதே போல் 2021 சட்டசபை தேர்தலிலும் 234 தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராவார். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஓராண்டுக்குள் திருமாநிலையூரில் பஸ் நிலையம் அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். அரவக்குறிச்சியில் வீடு இல்லாத ஏழை எளியவர்கள் 2,000 பேருக்கு நிலம் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அவர்களுக்கு விரைவில் நிலம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஜோதிமணி எம்.பி. பேசுகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி உள்ளிட்டவற்றையெல்லாம் விடுத்து திருமாநிலையூரில் பஸ் நிலையம் அமைக்க முன்வர வேண்டும். மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கு நேரடி தேர்தல் அல்ல என அரசாணை வெளியிட்டதை பா.ஜ.க. எதிர்ப்பது போல் இரட்டை வேடம் போடுகிறது என்றார்.

இந்த உண்ணாவிரத போராட்டமானது மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது. இதில் தி.மு.க. மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கே.சி.பழனிசாமி, மாநில விவசாய அணி செயலாளர் சின்னசாமி, மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணி மணி, குளித்தலை எம்.எல்.ஏ. ராமர், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சரவணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளவரசு, ஒன்றிய செயலாளர்கள் ரகுநாதன், கருணாநிதி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் சின்னசாமி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்டீபன் பாபு உள்பட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story