மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டி பாலியல் உணர்வை தூண்டியதாக - பள்ளி தாளாளர், போக்சோ சட்டத்தில் கைது
கோவையில் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டி பாலியல் உணர்வை தூண்டியதாக பள்ளி தாளாளர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை,
கோவை காந்திபுரம் 5-வது வீதியில் புனித மரியன்னை உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தாளாளராக பாதிரியார் மரிய ஆன்டனி தாஸ் (வயது 55) என்பவர் உள்ளார். இவர் அந்த பள்ளியில் 9 மற்றும் 10-ம் வகுப்புக்கு மாணவர்களுக்கு பாடம் நடத்துவது வழக்கம்.
அதன்படி அவர் நேற்று முன்தினம் மாணவிகளிடம் தனது செல்போனை கொடுத்து அதில் ஒரு செயலி உள்ளது. அந்த செயலியை பாருங்கள், அது பிடித்து இருந்தால் வீட்டில் சென்று உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் என்று கூறி உள்ளார்.
உடனே மாணவிகள் அவரிடம் இருந்த செல்போனை வாங்கி, அவர் கூறிய செயலியை பார்த்து உள்ளனர். அதில் ஆபாச படம் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் எதுவும் கூறாமல் திரும்ப அவரிடம் செல்போனை ஒப்படைத்துவிட்டனர்.
பின்னர் அவர்கள் தங்கள் வீட்டிற்கு சென்றதும் பெற்றோரிடம் கூறினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், நேற்று காலை 11 மணிக்கு அந்த பள்ளி முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டிய தாளாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ரத்தினபுரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பள்ளி தாளாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார், மாணவிகளுக்கு செல்போன் மூலம் ஆபாச படத்தை காட்டி பாலியல் உணர்வை தூண்டியதாக மரிய ஆன்டனி தாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
கோவையில் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story