தண்டவாளத்தில் மரம் விழுந்தது: ஊட்டி மலைரெயில் தாமதம்
தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் ஊட்டி மலைரெயில் தாமதமானது.
குன்னூர்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி என்ஜின் மூலமாகவும், குன்னூர் முதல் ஊட்டி வரை டீசல் என்ஜின் மூலமாகவும் மலைரெயில் இயக்கப்படுகிறது. இந்த மலைரெயிலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணம் செய்து இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசிக்கின் றனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மலைகளை குடைந்து மிகுந்த சிரமத்துக்கு இடையில் மலைரெயில் பாதை அமைக்கப்பட்டது. பருவமழைக்காலங்களில் அங்குள்ள தண்டவாளத்தில் மண்சரிவு, மரம் விழுதல் போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. இதனால் மலைரெயில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
தற்போது குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் குன்னூர்-ஊட்டி இடையே மலைரெயில் தண்டவாளத்தில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் மலைரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வழக்கம்போல் காலை 7.45 மணிக்கு குன்னூரில் இருந்து ஊட்டிக்கு புறப்படும் மலைரெயில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று, தண்டவாளத்தில் விழுந்த மரத்தை மின்வாள் மூலம் வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1¼ மணி நேரத்துக்கு பிறகு மரம் வெட்டி அகற்றப்பட்டது. அதன்பின்னர் காலை 9 மணிக்கு தாமதமாக குன்னூரில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் புறப்பட்டு சென்றது. அதில் 180 சுற்றுலா பயணிகள் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story