மயிலம் அருகே, மினிலாரி-ஆம்னி பஸ் மோதல்; விவசாயி பலி - போக்குவரத்து பாதிப்பு


மயிலம் அருகே, மினிலாரி-ஆம்னி பஸ் மோதல்; விவசாயி பலி - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 22 Nov 2019 3:45 AM IST (Updated: 22 Nov 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

மயிலம் அருகே மினிலாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் விவசாயி பலியானார். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மயிலம், 

வானூர் அருகே உள்ள ஒட்டை கிராமத்தை சேர்ந்தவர் சின்னராஜ்(வயது 58), விவசாயி. இவர் நேற்று அதிகாலை தனக்கு சொந்தமான ஆட்டுக்குட்டி ஒன்றை மினிலாரியில் ஏற்றிக் கொண்டு பேராம்பட்டு நோக்கி புறப்பட்டார். மினிலாரியை அதேஊரை சேர்ந்த காளிதாஸ் என்பவர் ஓட்டினார். மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பஸ் ஒன்று, மினிலாரி மீது பயங்கரமாக மோதியது.

இதில் மினிலாரியில் வந்த சின்னராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது ஆட்டுக்குட்டியும் விபத்தில் செத்தது.

மினிலாரியை ஓட்டிவந்த டிரைவர் காளிதாஸ் காயமடைந்தார். விபத்துக்குள்ளான பஸ் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி நின்றது. விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் இதுபற்றி மயிலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய டிரைவர் காளிதாசை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே விபத்தில் பலியான சின்னராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு, விபத்துக்குள்ளான பஸ்சும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Next Story