பவானி அருகே, வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் வசூல்; போலி போலீஸ்காரர் கைது
பவானி அருகே வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் வசூலித்த போலி போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
பவானி,
பவானி அருகே மூன்ரோடு பகுதியில் காக்கி சட்டை அணிந்தபடி ஒருவர் ரோந்து சுற்றி வந்தார். அவர் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஆண் மற்றும் பெண்களை தடுத்து நிறுத்தினார்.
பின்னர் அவர்களிடம் ஓட்டுனர் உரிமம் இருக்கிறதா? ஹெல்மெட் அணிந்திருக்கிறார்களா? என்று சோதனை செய்தார்.
அவ்வாறு ஓட்டு்னர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் இருந்தாலோ, ஹெல்மெட் அணியாவிட்டாலோ அவர்களுக்கு மிரட்டல் விடுத்தார்.
மேலும் அவர்களுக்கு அபராதம் விதிப்பதாக கூறி பணம் வசூல் வேட்டையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த போலீஸ்காரர் ஒருவரிடம் பணத்தை வசூலித்துள்ளார். அவரது நடவடிக்கையில் அந்த போலீஸ்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அப்பகுதி பொதுமக்களும் அந்த நபர் மீது சந்தேகப்பட்டனர். உடனே இதுபற்றி பவானி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் பண வசூல் வேட்டையில் ஈடுபட்ட நபர் வைத்திருந்த அடையாள அட்டையை வாங்கி சோதனை செய்தபோது அவர் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பொன்நகரை சேர்ந்த கருணாநிதி (வயது 40) என்பதும், மேட்டூரில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.
மேலும் அவர் போலீஸ்காரர் போல் நடித்து வாகன ஓட்டிகளிடம் பணத்தை வசூலித்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story