தூத்துக்குடியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு


தூத்துக்குடியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 21 Nov 2019 11:00 PM GMT (Updated: 21 Nov 2019 9:07 PM GMT)

தூத்துக்குடியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி,

நெல்லை மாவட்டத்தை பிரித்து புதிதாக தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய மாவட்டம் தொடக்க விழா இன்று(வெள்ளிக்கிழமை) தென்காசியில் நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு புதிய தென்காசி மாவட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வந்தார்.

அங்கு அவருக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ, தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ராஜலட்சுமி, உதயகுமார், எம்.எல்.ஏக்கள் சின்னப்பன், செல்வமோகன்தாஸ்பாண்டியன், நாராயணன், தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை, முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, முன்னாள் எம்.பிக்கள் மனோஜ்பாண்டியன், பிரபாகரன், தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், தூத்துக்குடி மாவட்ட முன்னாள் செயலாளர் ஆறுமுகநயினார், நெல்லை மாவட்ட ஆவின் தலைவர் சுதா கே.பரமசிவம், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் ஏ.கே.சீனிவாசன், ஓட்டப்பிடாரம் யூனியன் முன்னாள் தலைவர் காமாட்சி என்ற காந்தி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதே போன்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி, நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, தென்காசி மாவட்ட கலெக்டர் அருண்சுந்தர் தயாளன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன், தூத்துக்குடி கூடுதல் கலெக்டர்(வருவாய்) விஷ்ணுசந்திரன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன் ஆகியோரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலைய ரோட்டில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு பெண்கள் பூரண கும்பத்துடன் ரோட்டின் இருபுறமும் அணிவகுத்து நின்று வரவேற்றனர்.

மேலும் செண்டை மேளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. ரோட்டின் இருபுறமும் அ.தி.மு.க. கொடிகள் நடப்பட்டு இருந்தன. தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விமான நிலையம் முன்பு இன்னிசை கச்சேரியும் நடத்தப்பட்டது.

தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். இன்று காலை கார் மூலம் தென்காசிக்கு சென்று விழாவில் கலந்து கொள்கிறார். விழா முடிந்த பிறகு மதியம் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

Next Story