வியாசர்பாடியில் குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி போலீஸ் ஏட்டு பலி


வியாசர்பாடியில் குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி போலீஸ் ஏட்டு பலி
x
தினத்தந்தி 22 Nov 2019 3:51 AM IST (Updated: 22 Nov 2019 3:51 AM IST)
t-max-icont-min-icon

வியாசர்பாடியில் குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி போலீஸ் ஏட்டு பரிதாபமாக இறந்தார்.

பெரம்பூர், 

சென்னை எம்.கே.பி.நகர் போலீஸ் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவு போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தவர் பழனிக்குமார் (வயது 44). இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம் மேலூர் ஆகும். இவருக்கு விமலா என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இவர், குடும்பத்துடன் பரங்கிமலையில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு ஏட்டு பழனிக்குமார், எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் இருந்து வியாசர்பாடி போலீஸ் நிலையத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

லாரி சக்கரத்தில் சிக்கி பலி

வியாசர்பாடி முல்லைநகர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது சாலையில் பள்ளம் இருந்ததால் மோட்டார்சைக்கிளை மெதுவாக ஓட்டினார். அப்போது அவருக்கு பின்னால் சென்னை மாநகராட்சி அண்ணாநகர் 8-வது மண்டலத்தில் சேகரித்த குப்பைகளை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டிவிட்டு திரும்ப வந்து கொண்டிருந்த குப்பை லாரி மோதியது.

இதில் நிலைதடுமாறி மோட்டார்சைக்கிளுடன் சாலையில் விழுந்த ஏட்டு பழனிக்குமார் மீது குப்பை லாரி ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய அவர், அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கீழ்ப்பாக்கம் போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான பழனிக் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கூடுதல் கமிஷனர் அஞ்சலி

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து குப்பை லாரி டிரைவரான கோடம்பாக்கத்தை சேர்ந்த பிரான்சிஸ் (52) என்பவரை கைது செய்தனர்.

இதற்கிடையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு பழனிக்குமார் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக பலியான ஏட்டு பழனிக்குமார் உடலுக்கு சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் தினகரன், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் பழனிக்குமாரின் மனைவி மற்றும் மகள்களுக்கு ஆறுதல் கூறினார்.

அதேபோல் மேற்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமாரி, வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி, புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா, எம்.கே.பி. நகர் உதவி கமிஷனர் அழகேசன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர். அவர் பணியாற்றி வந்த எம்.கே.பி.நகர் போலீஸ் நிலையத்திலும் அவரது உருவ படத்துக்கு போலீசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

போலீஸ்காரர் பழனிக் குமார், பெற்றோரை இழந்து காப்பகத்தில் தங்கி படித்து சொந்த முயற்சியில் போலீஸ் வேலையில் சேர்ந்து 16 வருடங் களாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story