தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் டிஜிட்டல் கட்டண நடைமுறை “பாஸ்ட் டேக்” அறிமுகம்


தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் டிஜிட்டல் கட்டண நடைமுறை “பாஸ்ட் டேக்” அறிமுகம்
x
தினத்தந்தி 21 Nov 2019 11:00 PM GMT (Updated: 21 Nov 2019 10:23 PM GMT)

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் “பாஸ்ட் டேக்” என்ற டிஜிட்டல் கட்டண முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மதுரை,

தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் முக்கிய நகரங்களை இணைக்கும் நான்கு வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் நான்கு வழிச்சாலை திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இதற்காக குறிப்பிட்ட தூர இடைவெளியில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களுக்கு சாலை பராமரிப்பு மற்றும் பயன்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கிடையே, சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். சுங்கச்சாவடிகளில் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தால், அந்த வாகனம் சுங்கக்கட்டணம் செலுத்த ேதவையில்லை என்ற விதி உள்ளது.

1-ந்தேதி அமல்

இதனை பயன்படுத்தி பெரும்பாலான வாகனங்கள் கட்டண சலுகை பெற்று வந்தன. இதனால், மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டது. மேலும், மத்திய அரசு கடந்த சில வருடங்களாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை அரசு துறைகளில் 100 சதவீதம் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக பெரும்பாலான பண பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையில் கொண்டு வரப்படுகிறது.

அதன்படி, வருகிற 1-ந் தேதி முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை அமலுக்கு வருகிறது. இதற்கு “பாஸ்ட் டேக்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கப்பலூர் சுங்கச்சாவடி, எலியார்பத்தி சுங்கச்சாவடி, சிட்டம்பட்டி சுங்கச்சாவடி ஆகியன உள்ளன. இவற்றில் சுங்கச்சாவடியை கடந்து வரும் வழி மற்றும் செல்லும் வழி என தலா ஒரேயொரு பாதையை தவிர பிற பாதைகள் அனைத்தும் பாஸ்ட் டேக் வழித்தடங்களாக மாற்றப்பட்டுள்ளன.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை

இதுகுறித்து மதுரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட மேலாளர் சரவணன் கூறியதாவது:-

வாகன ஓட்டிகளின் வசதி, விரைவான போக்குவரத்து சேவைக்காக சுங்கச்சாவடிகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பாஸ்ட் டேக் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் வாகனங்களுக்கு ஏ.டி.எம். கார்டு போல ஒரு கார்டு வழங்கப்படும். அத்துடன், பார்கோடு வசதி கொண்ட ஸ்டிக்கர் ஒன்றும் வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டப்படும். வாகனம் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தும் பகுதியில் வந்து நின்றவுடன் வாகனத்தின் கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரில் உள்ள பார்கோடு அங்கு பொருத்தப்பட்டுள்ள கருவி மூலம் ஸ்கேன் செய்யப்படும்.

பின்னர் உரிய தொகை அவர்களது கணக்கில் இருந்து எடுத்து கொள்ளப்படும். செலுத்திய கட்டணம் குறித்த எஸ்.எம்.எஸ். தகவல் அவர்களின் செல்போன் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும். இந்த முறையில் ஏற்கனவே செலுத்தி வந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். சலுகைக்கட்டணங்களுக்கும் கார்டை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த கார்டு 5 வருடங்கள் வரை செல்லத்தக்கது. இதற்காக குறிப்பிட்ட தொகை பதிவுக்கட்டணமாக வசூலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story