சோனியா காந்தி ‘பச்சைக்கொடி’ காட்டி விட்டார்: சிவசேனா தலைமையில் கூட்டணி அரசு அமைகிறது இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு?


சோனியா காந்தி ‘பச்சைக்கொடி’ காட்டி விட்டார்: சிவசேனா தலைமையில் கூட்டணி அரசு அமைகிறது இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு?
x
தினத்தந்தி 21 Nov 2019 11:52 PM GMT (Updated: 21 Nov 2019 11:52 PM GMT)

மராட்டியத்தில் சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க சோனியா காந்தி பச்சைக்கொடி காட்டி விட்டார். இதையடுத்து கூட்டணி அரசு குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவை தொடர்ந்து, வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி கட்சிகள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் இரு கட்சிகளும் பகிர்ந்து கொள்வது என ஏற்கனவே பேசி முடிவு செய்யப்பட்டதாக சிவசேனா கூறியதை பாரதீய ஜனதா திட்டவட்டமாக மறுத்தது. இதனால் நடந்த குடுமிபிடி சண்டையால் அக்கட்சிகள் கூட்டணி அரசை அமைக்க முடியவில்லை.

கவர்னர் விதித்த கால கெடுவுக்குள் மற்ற கட்சிகளும் ஆட்சி அமைக்க முடியாமல் போனதால், மராட்டியத்தில் கடந்த 12-ந் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

பாரதீய ஜனதாவுடன் மோதலை தொடர்ந்து, கொள்கை ரீதியாக முரண்பாடு கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து தனது தலைமையில் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்தது. ஜனாதிபதி ஆட்சி அமல் ஆன பிறகு இது தொடர்பான பேச்சுவார்த்தையில் 3 கட்சிகளும் தீவிரம் காட்டின.

குறிப்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் இரு தடவை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.

இந்த பேச்சுவார்த்தை நேற்று டெல்லியில் உச்சக்கட்டத்தை எட்டியது. சோனியா காந்தி தனது வீட்டில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை அவசரமாக கூட்டி ஆலோசனை நடத்தினார். இதில் கலந்து கொண்ட மூத்த தலைவர்களுடன் மராட்டிய அரசியல் நிலவரம் குறித்தும், சிவசேனா தலைமையில் ஆட்சி அமைப்பது குறித்தும் அவர் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க சோனியா காந்தி பச்சை கொடி காட்டி விட்டதாகவும், இன்று (வெள்ளிக்கிழமை) இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து டெல்லியில் உள்ள சரத்பவார் வீட்டில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல், ஜெய்ராம் ரமேஷ், மல்லிகார்ஜுன கார்கே, மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் பிரபுல் படேல், சரத்பவார் மகள் சுப்ரியா சுலே, அஜித்பவார், ஜெயந்த் பாட்டீல், நவாப் மாலிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பிறகு காங்கிரஸ் தலைவர் பிரிதிவிராஜ் சவான் நிருபர்களிடம் கூறுகையில், “கூட்டணி ஆட்சி குறித்து எங்களது இரு கட்சிகளும் (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) அனைத்து விஷயங்களையும் பேசி இறுதி செய்து விட்டோம். இனி இன்று மும்பையில் சிவசேனாவுடன் பேசி கூட்டணி அரசின் கட்டமைப்பு குறித்து இறுதி செய்யப்படும்” என்றார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மும்பையில் அந்த கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடக்கிறது.

இதற்கு மத்தியில் 3 கட்சி தலைவர்களும் ஆட்சி அமைப்பது குறித்து இன்று மும்பையில் பேசி இறுதி முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ஆட்சி அமைக்கும் தங்களது முடிவு குறித்து மூன்று கட்சிகளும் கவர்னருக்கு தனித்தனி கடிதம் அனுப்ப முடிவு செய்து உள்ளனர்.

இந்த கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோரும் பட்சத்தில் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி விலக்கி கொள்ளப்படும் சூழல் உருவாகி உள்ளது. இதன் மூலம் பாரதீய ஜனதா அல்லாத புதிய அரசு மராட்டியத்தில் அமையும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவரான சஞ்சய் நிருபம், சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசில் காங்கிரஸ் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில், “உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் பல ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் கைகோர்த்து தவறு செய்தது. இதன் காரணமாக இதுவரை காங்கிரசால் அங்கு மீண்டு வரமுடியவில்லை. அதே தவறு மராட்டியத்திலும் செய்யப்படுகிறது. சிவசேனா தலைமையிலான ஆட்சியில் காங்கிரசுக்கு 3-வது இடம் கொடுக்கப்படுவது, இங்கு காங்கிரஸ் புதைக்கப்படுவதை போன்றது. எனவே சோனியா காந்தி யாருடைய அழுத்தத்திற்கும் பணியாமல் இருப்பது நல்லது” என்று கூறி உள்ளார்.

முதல்-மந்திரி பதவி 5 ஆண்டு காலமும் சிவசேனாவுக்கு தான் வழங்கப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் முதலில் கூறியிருந்தது. ஆனால் தற்போது முதல்-மந்திரி பதவியை சிவசேனாவும், தேசியவாத காங்கிரசும் சுழற்சி முறையில் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்ளவும், காங்கிரசுக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

முதல் இரண்டரை ஆண்டுகள் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவும் முதல்-மந்திரி பதவி வகிப்பார்கள் என்றும் அந்த தகவல்கள் கூறின.

Next Story