பொள்ளாச்சி அருகே பரிதாபம், தனியார் பள்ளி வேன் மோதி சிறுவன் பலி - டிரைவர் கைது


பொள்ளாச்சி அருகே பரிதாபம், தனியார் பள்ளி வேன் மோதி சிறுவன் பலி - டிரைவர் கைது
x
தினத்தந்தி 23 Nov 2019 4:30 AM IST (Updated: 22 Nov 2019 10:41 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே தனியார் பள்ளி வேன் மோதி சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதுதொடர்பாக வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பொங்காளியூரை சேர்ந்தவர் வீரதர்மராஜ் (வயது 37). விவசாயி. இவருடைய மனைவி லாவண்யா (31). இவர்களுடைய மகன் சஸ்வந்த் (5). அதேப் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சிறுவன் சஸ்வந்த் படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று காலை வீட்டு முன் உள்ள ரோட்டோரத்தில் சஸ்வந்த் விளையாடிக்கொண்டு இருந்தான்.

அப்போது அந்த வழியாக மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பள்ளி வேன் ஒன்று கோட்டூர் நோக்கி வந்தது. பொங்காளியூர் அருகே வந்த போது, திடீரென்று அந்த வேன் சாலையோரத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் சஸ்வந்த் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் வேன் சக்கரம் சிறுவன் மீது ஏறி, இறங்கியதில் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தான்.

இதனை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓடி வந்து விபத்தில் இறந்த சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் உதயசந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சஸ்வந்த்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு, கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய வேனை பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்துக்கு போலீசார் கொண்டு வந்தனர்.

இதுதொடர்பாக பள்ளி வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஜமீன்ஊத்துக்குளியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (63) என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தனியார் பள்ளி வேன் மோதி சிறுவன் சஸ்வந்த் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story