சிவகங்கை அருகே பரிதாபம்: ஊருணியில் மூழ்கி 2 சிறுமிகள் பலி - குளிக்க சென்ற போது நேர்ந்த சோகம்


சிவகங்கை அருகே பரிதாபம்: ஊருணியில் மூழ்கி 2 சிறுமிகள் பலி - குளிக்க சென்ற போது நேர்ந்த சோகம்
x
தினத்தந்தி 23 Nov 2019 4:15 AM IST (Updated: 23 Nov 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அருகே ஊருணியில் குளித்த 2 சிறுமிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாயினர்.

திருப்புவனம்,

சிவகங்கையை அடுத்த அரசனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் அபிஸ்ரீ (வயது 12). அதே பகுதியைச் சேர்ந்தவர் மழைமேகம். இவரது மகள் பிரியதர்ஷினி (13).

அபிஸ்ரீயும், பிரியதர்ஷினியும் அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தனர்.

சிறுமிகள் இருவரும் நேற்று மாலை பள்ளி முடிந்து அரசனூர் ஊருணியில் குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினர்.

இதனைப் பார்த்ததும் அந்த வழியாக வந்தவர்கள் ஓடிச் சென்று 2 சிறுமிகளையும் மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் இல்லாததால் உடனடியாக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பிரியதர்ஷினியும், அபிஸ்ரீயும் பரிதாபமாக இறந்து விட்டனர்.

சிறுமிகளின் உடல்களை பார்த்து அவர்களது பெற்றோர் கதறி அழுதது மிகவும் பரிதாபமாக இருந்தது.

2 சிறுமிகள் ஊருணியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story