ரஜினிகாந்த் சொன்ன அதிசயம்போல, 2021-ல் அ.தி.மு.க.-தி.மு.க. இல்லாத புதிய ஆட்சி அமையும் - டி.டி.வி.தினகரன் பேட்டி


ரஜினிகாந்த் சொன்ன அதிசயம்போல, 2021-ல் அ.தி.மு.க.-தி.மு.க. இல்லாத புதிய ஆட்சி அமையும் - டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 23 Nov 2019 4:45 AM IST (Updated: 23 Nov 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

ரஜினிகாந்த் சொன்ன அதிசயம்போல அ.தி.மு.க.-தி.மு.க. இல்லாத புதிய ஆட்சி 2021-ல் நிச்சயம் அமையும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சியில் நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர்கள் பழனியப்பன், வெற்றிவேல், மாநில அமைப்பு செயலாளர்கள் மனோகரன், சாருபாலா தொண்டைமான், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக டி.டி.வி.தினகரனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: திடீரென்று அ.ம.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்படுவது ஏன்?

பதில்: தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்காக திருச்சியில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அ.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக இல்லை. இதுவரை நடத்தாதவர்கள், தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமாவதுபோல இருப்பது வேடிக்கையாக உள்ளது.

அ.ம.மு.க. கட்சி அங்கீகார பதிவுக்காக விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. வருகிற உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் அங்கீகார பதிவு வந்தாலும், வராவிட்டாலும் எங்களது கட்சியினர் சுயேச்சையாகவும் போட்டியிட தயாராக உள்ளனர். ஏதோ ஒரு தேர்தலில் தோல்வியுற்றதை வைத்து அக்கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடாது. 72 மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எல்லோரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஆர்வத்தோடு இருக்கிறார்கள்.

கேள்வி: உள்ளாட்சி தேர்தலை நிறுத்த சிலர் முட்டுக்கட்டை போடுவதாக எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளாரே?

பதில்: அவர் அப்படித்தான் சொல்வார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடத்துவதுபோல முதலில் அவர்கள் கூட்டமெல்லாம் நடத்தினார்கள். அதே வேளையில் முதன்மை செயலாளரை வைத்து வானிலையை காரணம் காட்டி கடிதம் எழுதி நிறுத்தினர். என்னை பொறுத்தவரை உள்ளாட்சி தேர்தலை நடத்த இந்த அரசு தயாராக இல்லை.

கேள்வி: வருகிற சட்டமன்ற தேர்தலில் ரஜினியும், கமலும் உங்களுக்கு சவாலாக இருப்பார்கள் என கருதுகிறீர்களா?

பதில்: ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால், நாங்கள் யாரையும் சவாலாக நினைக்கவில்லை. எங்களது எண்ணமே, எங்களது எதிரிகளையும், துரோகிகளையும் அரசியலில் தோற்கடித்து இனி அவர்களை ஆட்சிக்கு வரவிடாமல் செய்வதுதான். அதற்காக நாங்கள் முழு மூச்சாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நிச்சயம் வருகிற தேர்தலில் மக்கள் மாபெரும் ஆதரவை எங்களுக்கு அளிப்பார்கள் என நம்புகிறேன்.

கேள்வி: எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனது அதிசயம் என ரஜினிகாந்த் சொல்லி இருப்பது பற்றி உங்கள் கருத்து?

பதில்: பழனிசாமி முதல்-அமைச்சர் ஆவார் என்று 2016-ல் நினைத்திருப்பாரா? 2017-ம் ஆண்டு ஜனவரியில் நினைத்திருப்பாரா?. அதுவும் இல்லை. பின்னர், நான்கு கால்களால் கைக்குழந்தை மாதிரி தவழ்ந்து வந்துதான் பதவி பெற்றார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தானே. வருகிற தேர்தலில் நிச்சயம் மாற்றம் வரும். அதைத்தான் நண்பர் ரஜினிகாந்தும் சொல்லி இருக்கிறார் என நினைக்கிறேன். ரஜினிகாந்த் அவர் கருத்தை தெளிவுப்படுத்தி இருக்கிறார். அந்த கருத்துப்படி தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் மாற்றத்தை தருவார்கள் என்பதுதான் அ.ம.மு.க.வின் கருத்து. 2021-ம் ஆண்டு அ.தி.மு.க.-தி.மு.க. இல்லாத மக்கள் விரும்புகிற புதிய ஆட்சி அமையும்.

கேள்வி: ஒரு பக்கம் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்திட வேண்டும் என்றும், இன்னொரு பக்கம் சோனியா காந்தி உயிருக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து என்றும் தி.மு.க. இரட்டை நிலைப்பாடுடன் உள்ளது பற்றி?

பதில்: தி.மு.க. என்றாலே இரட்டை நிலைப்பாடுதானே. இதனால்தான், 2011, 2016 சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டனர். ஏதோ ஒரு விபத்துபோல நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று விட்டது. மக்களிடம் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை என்பது வருகிற பொதுத்தேர்தலில் நிச்சயம் தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story