மாநகராட்சி ஆஸ்பத்திரியில் இ.சி.ஜி. எந்திரம் தீப்பிடித்து விபத்து: கையை இழந்த குழந்தை சிகிச்சை பலனின்றி சாவு


மாநகராட்சி ஆஸ்பத்திரியில் இ.சி.ஜி. எந்திரம் தீப்பிடித்து விபத்து: கையை இழந்த குழந்தை சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 23 Nov 2019 3:45 AM IST (Updated: 23 Nov 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

கே.இ.எம். மாநகராட்சி ஆஸ்பத்திரியில் இ.சி.ஜி. எந்திரம் தீப்பிடித்ததில் கையை இழந்த குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தது.

மும்பை,

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்தவர் பன்னாலால். இவரது 2 மாத மகன் பிரின்ஸ் ராஜ்பர். குழந்தை பிரின்ஸ் ராஜ்பர் இருதய நோய் மற்றும் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தான். எனவே பன்னாலால் சிகிச்சைக்காக அவனை மும்பை அழைத்து வந்தார். குழந்தை பிரின்ஸ் ராஜ்பர் கடந்த 6-ந்தேதி சிகிச்சைக்காக பரேல் கே.இ.எம். மாநகராட்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்.

தீவிர சிகிச்சை பிரிவில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் மருத்துவமனையில் 7-ந்தேதி அதிகாலை 2.50 மணிக்கு இ.சி.ஜி. எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவால் குழந்தையின் உடலில் பொருத்தப்பட்டு இருந்த வயர் எரிந்தது. இதனால் குழந்தையின் உடலில் 20 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது. இந்த தீக்காயம் காரணமாக குழந்தையின் உயிரை காப்பாற்ற இடது கையை துண்டித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட சிலர் குழந்தைக்கு அதிகபட்ச இழப்பீடு கொடுக்க வேண்டும் என மும்பை மாநகராட்சியை வலியுறுத்தினர். இதையடுத்து மும்பை மாநகராட்சி குழந்தைக்கு ஏற்கனவே அறிவித்து இருந்த ரூ.5 லட்சத்தை ரூ.10 லட்சமாக உயர்த்தி இழப்பீடாக கொடுக்க முன்வந்தது. மேலும் காயம், நிமோனியா, இருதய நோயால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தை பிரின்ஸ்ராஜ்பர் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று அதிகாலை குழந்தை பிரின்ஸ் ராஜ்பர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

இது குறித்து கே.இ.எம். ஆஸ்பத்திரி டீன் ஹேமந்த் தேஷ்முக் கூறியதாவது:-

குழந்தை வென்டிலேட்டரில் தான் வைக்கப்பட்டு இருந்தான். நேற்று முன்தினம் இரவு அவனது உடல் நிலை மோசமானது. அவனுக்கு அதிகாலை 2.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து அவனால் மீண்டு வரமுடியவில்லை. அதிகாலை 2.45 மணியளவில் குழந்தை இறந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

குழந்தையின் தந்தை பன்னாலால், ‘‘எனது மகன் வென்டிலேட்டரில் இருந்து வெளியே வரவே இல்லை. அவனது இறுதி சடங்கை மும்பையிலேயே முடிக்க உள்ளோம். வாரணாசி வரை அவனை கொண்டு செல்ல முடியாது’’ என கண்ணீர் மல்க கூறினார்.

Next Story