விலையில்லா வெள்ளாடு வழங்குவதில் பாரபட்சம் - ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
விலையில்லா வெள்ளாடு வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
பேரையூர்,
டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது மத்தக்கரை ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள குருவப்பநாயக்கன்பட்டி, பெரியபூலாம்பட்டி கிராமத்தில் 1500 பேர் வசித்து வருகின்றனர். தமிழக அரசின் விலையில்லா வெள்ளாடு வழங்கும் திட்டத்தின் கீழ் இங்கு கடந்த சில மாதத்திற்கு முன்பு கால்நடைத்துறை, கிராம நிர்வாக அலுவலர், ஒன்றிய அலுவலர்கள் சேர்ந்த கமிட்டி மூலம் 136 பேர் தேர்வு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒன்றிய நிர்வாகம் மூலம் அனுப்பப்பட்டது.
இந்த பயனாளிகள் தேர்வில் வசதி படைத்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என்றும் உண்மையான பயனாளிகள் இந்த திட்டம் மூலம் தேர்வு செய்யப்படவில்லை என்றும் புகார் எழுந்தது.
இந்த நிலையில் கிராம மக்கள் ஏராளமானோர் நேற்று காலை டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் உண்மையான பயனாளிகள் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா வெள்ளாடு வழங்கவேண்டும், இதற்காக உண்மையான பயனாளிகள் தேர்வு செய்யப்படவேண்டும் என்ற மனுவினை டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கலைசெல்வனிடம் கொடுத்தனர்.
பின்னர் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களை அழைத்து பேச்சு வார்த்தை நடந்தது. முற்றுகையில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்களை அழைத்து இதுசம்பந்தமாக கொடுக்கப்பட்ட மனுவினை மறுபரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. பின்னர் முற்றுகையில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story