சங்கரன்கோவில், ஆலங்குளத்தில் புதிய அரசு கலைக்கல்லூரிகள் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


சங்கரன்கோவில், ஆலங்குளத்தில் புதிய அரசு கலைக்கல்லூரிகள் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Nov 2019 10:30 PM GMT (Updated: 22 Nov 2019 8:11 PM GMT)

சங்கரன்கோவில், ஆலங்குளத்தில் புதிய அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தென்காசி,

தென்காசி புதிய மாவட்டம் தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருபாலரும் படிக்கும் வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரூ.8 கோடியே 40 லட்சம் செலவில் அமைக்கப்படும். ஆலங்குளத்தில் ரூ.9 கோடியே 13 லட்சம் மதிப்பில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்.

இந்த மாவட்டத்தில் வேளாண்மை பணி சிறப்பாக நடைபெறும் வகையில் மழைநீரை முறையாக சேமித்து பாசனத்திற்கு பயன்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, தென்காசி மாவட்டத்தில் சிற்றாறு கோட்ட உபவடி நிலத்தில் ரூ.22 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, ஆலங்குளம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர் ஆகிய ஒன்றியங்களில் சுமார் 6 ஆயிரம் ஹெக்டேர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் 395 பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் முழுமையாக விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.

கடையநல்லூர் வட்டம் சிந்தாமணி கிராமத்தில் கோட்டமலையாற்றின் குறுக்கே ரூ.1 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படும். மேலும் கோட்டமலையாற்றின் குறுக்கே ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் படுக்கை அணை அமைத்து வண்ணநேரி, சகலநேரி, மலையடிகுறிச்சி ஆகிய குளங்களுக்கு தண்ணீர் வழங்கும் திட்டம் மேற்கொள்ளப்படும். வீரகேரளம்புதூர் வட்டம் வீராணம் பெரிய குளம் கால்வாயில் இருந்து காவக்குறிச்சி பெரியகுளத்திற்கு புதிய கால்வாய் அமைப்பதற்காக ஆய்வு பணி மேற்கொள்ளப்படும்.

சிவகிரி வட்டம் ராயகிரி கிராமம் உள்ளாற்றின் குறுக்கே ரூ.1 கோடியே 65 லட்சம் மதிப்பில் புதிய அணைக்கட்டு அமைத்து மேலகரிசல் குளத்திற்கு தண்ணீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். சிவகிரி அருகே உள்ள தென்மலை கிராமத்தில் ரூ.2 கோடி மதிப்பில் அணைக்கட்டு அமைத்து கண்ணசேம்பல் குளத்திற்கு தண்ணீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதுதவிர இந்த மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மேலும் சிறப்பான திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

சங்கரன்கோவில், புளியங்குடி, திருவேங்கடம் ஆகிய பேரூராட்சிகளுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.147 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். ஆலங்குளம், சங்கரன்கோவில் ஒன்றியங்களை சேர்ந்த 147 ஊரக குடியிருப்புக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.31.31 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

கீழப்பாவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாப்பாக்குடி, கடையம், கீழப்பாவூர் ஆகிய பகுதியைச் சேர்ந்த 163 ஊரக குடியிருப்புக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.41 கோடியில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.

செண்பகவல்லி அணைக்கட்டை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து கேரள அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். தாமிரபரணி ஆற்றில் 2 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இது அரசின் பரிசீலனையில் உள்ளது. முதியோர் பென்சன் திட்டத்திற்காக ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது, ஆண்டு வருமானம் ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் 5 லட்சம் முதியவர்கள் பயன்பெறுவார்கள்.

நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே இந்த அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. குறிப்பாக வாஞ்சிநாதன் மணிமண்டபம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். நாங்கள் செய்த சாதனைகளை பட்டியலிட்டு காட்டுகிறோம். எங்கள் சாதனைகளை மக்கள் புரிந்து கொண்டு உள்ளனர். வருகிற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய மாவட்டம் தொடக்க விழாவையொட்டி மேடை அருகே தீயணைப்பு துறை சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்க மூர்த்தி தலைமையில் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு தீயணைப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டு இருந்தன. அந்த கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் பார்வையிட்டனர். வேளாண்மை துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியையும் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

விழா மேடையில் அவருக்கு செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆளுயரமாலை அணிவித்தார். முன்னதாக பாவூர்சத்திரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழாவில், நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் பாப்புலர் முத்தையா, ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் ஏ.கே.சீனிவாசன், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அந்தோணி அமல்ராஜா, செங்கோட்டை நகர செயலாளர் கிரு‌‌ஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, முன்னாள் எம்.எல்.ஏ. அண்ணாமலை, தொழில் அதிபர் கிரு‌‌ஷ்ணராஜா, சென்னை தாய்கோ வங்கி மாநில துணை தலைவர் குற்றாலம் சேகர், குற்றாலம் நகர பஞ்சாயத்து முன்னாள் துணை தலைவர் கணே‌‌ஷ் தாமோதரன், மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், குற்றாலம் ஜெயலலிதா பேரவை செயலாளர் சன்னியாசி என்ற சாமிநாத பாண்டியன், அரசு வக்கீல்கள் சுப்பையா, சின்னத்துரை பாண்டியன், ராமச்சந்திரன், கார்த்திக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் அருள் காட்வின், தென்காசி நகர செயலாளர் சுடலை, அட்மா தலைவர் கணபதி, ஆலங்குளம் முன்னாள் யூனியன் தலைவர் வீரபுத்திரன், பாளையங்கோட்டை பகுதி செயலாளர் ஜெனி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் கிருபாநிதி, எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராமசுப்பு, பாளையங்கோட்டை ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், சுரண்டை நகர செயலாளர் சக்திவேல், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் செந்தில்குமார், நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் கருப்பசாமி பாண்டியன், ஆலங்குளம் அக்ரோ கூட்டுறவு நிறுவன தலைவர் கிரு‌‌ஷ்ணசாமி, நெல்லை புறநகர் மாவட்ட அவை தலைவர் வீரபாண்டியன், தொழில் அதிபர் காசிபாண்டியன், குருக்கள்பட்டி கிளை செயலாளர் ராஜ்குமார், வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் மூர்த்தி பாண்டியன், புளியங்குடி நகர செயலாளர் பரமேசுவர பாண்டியன், தேவிபட்டினம் கிளை செயலாளர் நீராத்திலிங்கம், ஊராட்சி செயலாளர் ராஜசிங்கம், வாசுதேவநல்லூர் ஒன்றிய பொருளாளர் இரணவீறு என்ற செல்லையா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ராமசாமிபுரம் கிளை செயலாளர் சவுந்திரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story