குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 3-வது மாடியில் உள்ள வீட்டில் தீ விபத்து


குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 3-வது மாடியில் உள்ள வீட்டில் தீ விபத்து
x
தினத்தந்தி 22 Nov 2019 10:53 PM GMT (Updated: 22 Nov 2019 10:53 PM GMT)

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 3-வது மாடியில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள், நகை, வெள்ளி பொருட்கள் அனைத்தும் தீயில் கருகியது.

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் ஏ.கல்யாணபுரம் 6-வது பிளாக்கில் குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் வசித்து வருபவர் ஏழுமலை. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி அலமேலு. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

நேற்று இரவு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு அனைவரும் வெளியே சென்று விட்டனர். இரவு 9 மணியளவில் அவரது வீட்டில் தீப்பிடித்து கரும்புகை வெளியேறுவதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

பொருட்கள் நாசம்

வியாசர்பாடி, செம்பியம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 3-வது மாடிக்கு சென்று வீட்டின் கதவுகளை உடைத்து தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் வீட்டில் இருந்த ஏ.சி. எந்திரம், வாஷிங் மெஷின், பிரிட்ஜ், டி.வி. மற்றும் 10 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் அனைத்தும் தீயில் கருகியது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story