நள்ளிரவில் வீடுகளை நோட்டமிடும் முகமூடி கொள்ளையன் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியால் பொதுமக்கள் அச்சம்


நள்ளிரவில் வீடுகளை நோட்டமிடும் முகமூடி கொள்ளையன் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியால் பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 23 Nov 2019 5:22 AM IST (Updated: 23 Nov 2019 5:22 AM IST)
t-max-icont-min-icon

போரூரில் ஜட்டி, பனியன் அணிந்தபடி நள்ளிரவில் வீடுகளை நோட்டமிடும் கொள்ளையன் உருவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருப்பதை கண்டு அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

பூந்தமல்லி,

சென்னை போரூர் சமயபுரம் 5-வது தெருவில் உள்ள குடியிருப்புகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் காலை நேரங்களில் திசை மாறி இருப்பதும், அதனை வீட்டு உரிமையாளர்கள் சரி செய்வதுமாக இருந்தனர். ஆனால் தினமும் இதே நிலை நீடித்ததால் சந்தேகம் அடைந்த குடியிருப்புவாசிகள், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் நள்ளிரவு நேரத்தில் ஜட்டி, பனியன் மற்றும் முகத்தில் முகமூடி அணிந்தபடி வரும் கொள்ளையன், ஒவ்வொரு வீட்டின் சுற்றுச்சுவரையும் ஏறி உள்ளே குதித்து, ஜன்னல் கதவை திறந்து டார்ச் லைட்டை அடித்து பார்த்து, வீட்டில் ஆட்கள் நடமாட்டம் உள்ளதா? என நோட்டமிடுகிறார்.

அவரின் இரு கைகளிலும் கையுறை அணிந்து இருப்பதுடன், கையில் நீண்ட கம்பு ஒன்றையும் வைத்து உள்ளார். மேலும் அவரது பின்புறத்தில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் மறைத்து வைத்து உள்ளார்.

பொதுமக்கள் அச்சம்

கொள்ளையடிக்கும் நோக்கத்தில் நள்ளிரவில் வீடுகளை நோட்டமிடும் அவர், முன்னெச்சரிக்கையாக முகமூடி அணிந்து இருந்தாலும் தனது உருவம் பதிவாகாமல் இருக்க குடியிருப்பு பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை திருப்பி வைத்து செல்வது தெரிந்தது.

இதனால் அச்சம் அடைந்துள்ள அந்த பகுதி பொதுமக்கள், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளுடன் வளசரவாக்கம் போலீசில் புகார் செய்து உள்ளனர். தங்கள் பகுதியில் இரவு நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, நள்ளிரவில் கொள்ளையடிக்கும் நோக்கில் வீடுகளை நோட்டமிடும் முகமூடி கொள்ளையனை உடனடியாக பிடிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story