கோடையை சமாளிக்கும் விதமாக சென்னை குடிநீர் தேவைக்கு புதிய நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு பொதுப்பணித்துறை நடவடிக்கை
கோடையில் சென்னை குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்வதற்காக விழுப்புரம் மாவட்டம் கழுவேலி ஏரியை புதிய நீர் ஆதாரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள தண்ணீரை சென்னைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை பொதுப்பணித்துறை எடுத்து உள்ளது.
சென்னை,
சென்னை மாநகர பகுதிகளுக்கு தேவையான குடிநீர் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து எடுக்கப்படுகிறது. இவற்றுடன் மீஞ்சூர் மற்றும் நெம்மேலி ஆகிய இடங்களில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மற்றும் வீராணம் குழாய், நெய்வேலி நீர்ப்படுகை, தாமரைப்பாக்கம், பூண்டி மற்றும் மீஞ்சூர் விவசாய கிணறுகள், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளின் நிலத்தடி நீர் ஆதாரங்கள் மற்றும் எருமையூர் கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.
சராசரியாக நாள்தோறும் சென்னைக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 650 மில்லியன் லிட்டர் தான் குடிநீர் ஆதாரங்களில் இருந்து எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.
குடிநீர் வழங்கும் 4 ஏரிகளிலும் நேற்றைய நிலவரப்படி 3.193 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் 1,585 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருந்தது. வரவிருக்கும் கோடையில் முழுமையாக தண்ணீர் வினியோகம் செய்வதற்காக தற்போது பெய்து வரும் மழை மூலம் கூடுதலாக தண்ணீர் ஏரிகளில் தேக்கி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதிய நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு
இந்தநிலையில் கோடையை சமாளிக்கும் விதமாக சென்னை குடிநீர் தேவைக்கு தற்போது புதிதாக ஒரு நீர் ஆதாரத்தை பொதுப்பணித்துறை கண்டுபிடித்து உள்ளது.
அந்த புதிய குடிநீர் ஆதாரம் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், கந்தாடு, வண்டிப்பாளையம் ஆகிய கிராமப் பகுதிகளில் கடற் கரையை ஒட்டிய கழுவேலி ஏரி ஆகும். இந்த ஏரியில் எப்போதும் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஏரி நீரை நன்னீராக மாற்றி, சென்னை மாநகர பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டுக்கு கொண்டு செல்வதற்கான திட்டப் பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது.
நன்னீராக மாற்றம்
முதல்கட்டமாக, மரக்காணம் கழுவேலி ஏரியில் தேங்கி கிடக்கும் நீரை நன்னீராக மாற்றி, சென்னை மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்கு கொண்டு செல்வதற்கான புதிய திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு நதிநீர் பாதுகாப்புக் கழக தலைவர் கோ.சத்தியகோபால் உள்ளிட்ட அதிகாரிகள் கழுவேலி ஏரிக்கு சென்று தண்ணீர் இருப்பு, அதனுடைய தன்மை குறித்து ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தினர்.
1 டி.எம்.சி. இருப்பு
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவேலி ஏரி, சென்னையில் இருந்து சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த ஏரிக்கு 30 கிலோ மீட்டர் பரப்பளவில் நீர்பிடிப்பு பகுதிகள் உள்ளன. இந்தப்பகுதிகளில் தற்போது பெய்த மழை தண்ணீர் ஏரிக்கு வருகிறது. ஏரியில் தற்போது 1 டி.எம்.சி. அளவுக்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனை சென்னைக்கு குடிநீர் தேவைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது அதற்கான முதல் கட்ட ஆய்வு நடந்து வருகிறது.
கழுவேலியில் இருந்து சென்னைக்கு வீராணம் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதா? என்பது குறித்து எல்லாம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதேபோன்று இங்கிருந்து தண்ணீரை பொதுப்பணித்துறை அல்லது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கொண்டு செல்வது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story