அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றனர் நிலையான ஆட்சி அமைய பா.ஜனதாவை மக்கள் ஆதரிப்பார்கள் முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை


அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றனர் நிலையான ஆட்சி அமைய பா.ஜனதாவை மக்கள் ஆதரிப்பார்கள் முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை
x
தினத்தந்தி 24 Nov 2019 5:00 AM IST (Updated: 24 Nov 2019 12:27 AM IST)
t-max-icont-min-icon

எனது தலைமையிலான அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றனர். மாநிலத்தில் நிலையான ஆட்சி அமைய பா.ஜனதாவை மக்கள் ஆதரிப்பார்கள் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே முதல்-மந்திரி எடியூரப்பாவால் ஆட்சியை தக்கவைத்து கொள்ள முடியும். இதனால் இடைத்தேர்தலுக்கு பின்பு எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு கவிழ்வது உறுதி என்று முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா மற்றும் குமாரசாமி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது;-

மாநிலத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். அதனால் இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் பா.ஜனதாவுக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றது என்று சித்தராமையாவுக்கு தெரியும். காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதனை சித்தராமையாவும், குமாரசாமியும் மறந்து விடக்கூடாது.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் நிலைமை எப்படி இருந்தது என்று சித்தராமையா, குமாரசாமி அறிந்து பேச வேண்டும். மக்கள் பா.ஜனதா பக்கமும், பிரதமர் நரேந்திர மோடி பக்கமும் இருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 20 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று கூறி வந்தேன். ஆனால் 26 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றது. நான் எதிர்பார்த்ததை விட அதிக தொகுதிகளில் மக்கள் வெற்றி பெற செய்திருந்தனர்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்றிருந்தனர். ஆனால் இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட அந்த கட்சிகளால் வெற்றி பெற முடியாது. 15 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும். எந்த சூழ்நிலையிலும் எனது தலைமையிலான அரசை கவிழ்த்து விட முடியாது. இந்த ஆட்சி கவிழும் என்று எதிர்க்கட்சிகள் பகல் கனவு காண்கின்றன. அது பலிக்காது. பகல் கனவு காண்பதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும். இடைத்தேர்தலுக்கு பின்பு நிலையான ஆட்சி அமை ந்து விடக்கூடாது என்று காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் நினைக்கின்றனர்.

எனது தலைமையில் நிலையான ஆட்சி அமையவிடாமல் தடுக்கவும், அரசை கவிழ்க்கவும், இடைத்தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றியை தடுக்க சித்தராமையா, குமாரசாமி முயற்சிக்கின்றனர். அதனால் நிலையான ஆட்சி அமைய வாக்காளர்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மக்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளனர். மக்களின் ஆதரவுடன் அடுத்த 3½ ஆண்டுகள் நான் முதல்-மந்திரியாக இருப்பேன். கர்நாடகத்தை மாதிரி மாநிலமாக உருவாக்குவதே எனது குறிக்கோள். அடுத்த 3½ ஆண்டுகளில் மாநில வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்.

பெலகாவி மாவட்டத்தில் உள்ள அதானி, காக்வாட், கோகாக் ஆகிய 3 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய உள்ளேன். ஒவ்வொரு தொகுதிகளிலும் டிசம்பர் 3-ந் தேதிக்குள் 2 முறை பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளேன். அதானி, காக்வாட் தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளராக துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி நியமிக்கப்பட்டு உள்ளார். அந்த 2 தொகுதிகளிலும் பா.ஜனதா வேட்பாளர்களை அவர் வெற்றி பெற செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

லட்சுமண் சவதி அடுத்த 3½ ஆண்டுகளும் துணை முதல்-மந்திரி பதவியில் இருப்பார். அவரை மாற்றும் எண்ணும் இல்லை. கட்சி மேலிடத்தின் உத்தரவின் பேரில் துணை முதல்- மந்திரியாக லட்சுமண் சவதி நியமிக்க ப்பட்டு உள்ளார். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story