சுய உதவி குழுவினருக்கு ரூ.34 லட்சம் கடன் உதவி அமைச்சர் காமராஜ் வழங்கினார்


சுய உதவி குழுவினருக்கு ரூ.34 லட்சம் கடன் உதவி அமைச்சர் காமராஜ் வழங்கினார்
x
தினத்தந்தி 24 Nov 2019 4:30 AM IST (Updated: 24 Nov 2019 12:37 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டையில் ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழுவினருக்கு ரூ.33 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான கடன் உதவிகளை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டையில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் முத்துப்பேட்டை வட்டாரத்திற்குட்பட்ட ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு சுய உதவி குழுவினருக்கு ரூ.33 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயல்

கஜா புயலின் தாக்கம் ஏற்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. கஜா புயலினால் மிகவும் பாதிப்படைந்த பகுதிகளில் ஒன்றான முத்துப்பேட்டையில் மக்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்திருந்தனர். புயலின்போது அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.

தமிழக முதல்-அமைச்சர் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கான சுய உதவிக்குழுக்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் பெறும் கடன்களை சரியாக திருப்பி செலுத்தி வந்தால் ரூ.12 லட்சம் வரை கடன் உதவி வழங்க வழிவகை உள்ளது.

ரூ.114 கோடி

திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு இதுவரை ரூ.114 கோடியே 5 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது. பொதுவினியோக திட்டத்தின்கீழ் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் சுய விருப்பத்தின்பேரில் குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால் அதற்கான விண்ணப்பங்களை வருகிற 26-ந் தேதிக்குள் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடர் சமர்ப்பிக்கலாம்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் செயல்படும் பொதுசேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பித்து மாற்றிக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வீட்டுமனை பட்டா

இதனை தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் 150 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், விலையில்லா வீட்டுமனை பட்டாக்கான ஆணைகளையும் அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட அலுவலர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், உதவி திட்ட அலுவலர் காமராஜ், பேரூராட்சி முன்னாள் தலைவர் அருணாச்சலம், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்கள் நடராஜன், ஜீவானந்தம், கூட்டுறவு சங்க தலைவர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story