விழுப்புரத்தில் ரூ.1½ கோடியில் புதுப்பொலிவு பெறும் குளம் கலெக்டர் ஆய்வு


விழுப்புரத்தில் ரூ.1½ கோடியில் புதுப்பொலிவு பெறும் குளம் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 24 Nov 2019 4:30 AM IST (Updated: 24 Nov 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ரூ.1½ கோடியில் குளம் சீரமைக்கப்பட்டு சுற்றிலும் நடைபயிற்சியுடன் பூங்கா அமைக்கப்படுகிறது. இதையொட்டி அந்த குளத்தை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்புரம்,

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் ஆதிவாலீஸ்வரர் கோவிலுக்கு பின்புறத்தில் குளம் உள்ளது. கடந்த காலங்களில் விழுப்புரம் நகர மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்பட்டு வந்த இந்த குளம் நாளடைவில் பராமரிப்பு இல்லாமல் குப்பை கொட்டும் இடமாக மாறியது. இந்த குளத்திலும், குளத்தை சுற்றிலும் மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது.

இந்த குப்பைகளை அவ்வப்போது தீ வைத்து கொளுத்தி விடுவதால் அதிலிருந்து வெளியேறும் நச்சு புகையினால் அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் மட்டுமின்றி விழுப்புரம் நேருஜி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இந்த குளத்தை தூர்வாரி சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று நகர மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

ரூ.1½ கோடியில் சீரமைப்பு

இந்நிலையில் விழுப்புரம் நகராட்சி பொன்விழா ஆண்டையொட்டி நகரின் அடிப்படை வளர்ச்சி பணிக்காக தமிழக அரசு ரூ.50 கோடியை நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. அதில் ரூ.1½ கோடியில் இந்த குளத்தை தூர்வாரி புதுப்பிப்பதோடு குளத்தை சுற்றிலும் நடைபயிற்சியுடன் கூடிய பூங்கா அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

இதனிடையே இங்குள்ள குளத்தை சுற்றி ஆட்டோ, கார், வேன் நிறுத்தங்கள் உள்ளன. அவற்றை காலி செய்து மாற்று இடம் ஒதுக்குமாறு நகராட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். இதனால் அங்குள்ள வாகன டிரைவர்கள், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து தங்களுக்கு மாற்று இடம் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை மனு கொடுத்தனர்.

கலெக்டர் ஆய்வு

மனுவை பெற்ற அமைச்சர் சி.வி.சண்முகம், இதனை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டார். அதன்படி கலெக்டர் அண்ணாதுரை, விழுப்புரம் பழைய பஸ் நிலையத்திற்கு நேரில் சென்று அதன் அருகில் உள்ள குளத்தையும், அங்குள்ள வாகன நிறுத்தங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கார், ஆட்டோ, வேன்கள் ஆகியவற்றை நிறுத்துவதற்கு வசதியாக விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகிலும், புதிய பஸ் நிலையம் அருகிலும் தனித்தனியாக பிரித்து அங்கு மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்வதாக வாகன டிரைவர்களிடம் கலெக்டர் உறுதியளித்தார்.

இந்த ஆய்வின்போது கோட்டாட்சியர் ராஜேந்திரன், தாசில்தார் கணே‌‌ஷ், வருவாய் ஆய்வாளர் சாதிக், நகராட்சி பொறியாளர் ஜோதிமணி, நகர்நல அலுவலர் ஜெயவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story