சப்-இன்ஸ்பெக்டர் விபல்குமார் தற்கொலை: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு நாராயணசாமி உத்தரவு


சப்-இன்ஸ்பெக்டர் விபல்குமார் தற்கொலை: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு நாராயணசாமி உத்தரவு
x
தினத்தந்தி 24 Nov 2019 4:45 AM IST (Updated: 24 Nov 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விபல்குமார் தற்கொலை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி,

நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விபல் குமார் கடந்த 21-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. உயர் அதிகாரிகளின் துன்புறுத்தல் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாக விபல்குமாரின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினார்கள். உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை உடலை வாங்கமாட்டோம் என்று திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் விபல்குமாரின் மனைவி கிரு‌‌ஷ்ணபிரியா மற்றும் உறவினர்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா ஆகியோரை நேற்று சந்தித்து மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

சப்-இன்ஸ்பெக்டர் விபல்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி.யை அவரது குடும்பத்தினர் சந்தித்து நேர்மையான விசாரணை நடத்த கேட்டுள்ளனர். அதன்படி விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த விசாரணை தற்போது சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இந்த விசாரணை நடைபெறும்.

விபல்குமாரின் மனைவி படித்தவர். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளேன். அதேபோல் முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்தும் ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

விபல்குமார் மரணம் பற்றி நேர்மையாக விசாரணை நடத்தி யார் மீது தவறு இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். புதுவை மாநிலத்தில் நடந்த முதல் சம்பவம் இதுதான். விபல்குமார் ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதுதொடர்பாக பல டாக்டர்களை சந்தித்து அவர் சிகிச்சை பெற்றுள்ளார். பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தி அந்த அறிக்கை வந்தபின் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story