நெல்லையில் புதிய கோர்ட்டுகள் திறப்பு விழா: ‘‘இளம் வக்கீல்கள் நீதித்துறை மாண்பை பாதுகாக்க வேண்டும்’’ சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் பேச்சு


நெல்லையில் புதிய கோர்ட்டுகள் திறப்பு விழா: ‘‘இளம் வக்கீல்கள் நீதித்துறை மாண்பை பாதுகாக்க வேண்டும்’’ சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் பேச்சு
x
தினத்தந்தி 23 Nov 2019 11:15 PM GMT (Updated: 23 Nov 2019 9:35 PM GMT)

‘‘இளம் வக்கீல்கள் நீதித்துறை மாண்பை பாதுகாக்க வேண்டும்‘‘ என்று நெல்லையில் நடந்த புதிய கோர்ட்டுகள் திறப்பு விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் கூறினார்.

நெல்லை,

நெல்லையில் காசோலைக்கான சிறப்பு கோர்ட்டு, ராதாபுரத்தில் உரிமையியல், குற்றவியல் கோர்ட்டு திறப்பு விழா, நாங்குநேரியில் ரூ.4 கோடியே 18 லட்சம் மதிப்பில் புதிய கோர்ட்டு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பாளையங்கோட்டையில் உள்ள சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் நேற்று நடந்தது.

விழாவில் நெல்லை மாவட்ட நீதிபதி நசீர் அமகது வரவேற்று பேசினார். சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் கிருபாகரன், அனிதா சமந்த் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

நீதிபதி கிருபாகரன் ரிமோட் மூலம் புதிய கோர்ட்டை திறந்து வைத்தும், புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டியும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியல்வாதிகள் தான் முப்பெரும் விழா நடத்துவார்கள் என்று நினைக்க வேண்டாம். நீதித்துறையும் முப்பெரும் விழாவை நடத்தும். இங்கு நடைபெறுவது முப்பெரும் விழா.

நெல்லை என்றதும் முதலில் ஆதிச்சநல்லூர் தான் நினைவுக்கு வருகிறது. தமிழ் சமுதாயம் தோன்றியது தாமிரபரணி நதிக்கரையில் தான். அதேபோல் வைகை நதிக்கரையிலும் தமிழ் நாகரிகம் தோன்றியது என வரலாறு தெரிவிக்கிறது. நாகரிகம் தோன்றிய இடத்தில் இருந்து பேசுவது பெருமையாக இருக்கிறது.

பழங்காலத்தில் ஆட்சி நிர்வாகம், மக்களை காவல் காக்கும் போலீஸ் நிர்வாகம், நீதி வழங்கும் நீதித்துறை ஆகியவை அரசர் கையில் தான் இருந்தது. சுதந்திரம் அடைந்த பிறகு அந்த 3 துறைகளும் தனித்தனியாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு துறைக்கும் தனியாக அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், அந்த 3 துறைகளும் அரசு எந்திரம் மூலம் செயல்பட்டு வருகின்றன. தற்போது நீதிமன்றம் என்றால் வக்கீல்களின் கோட்டை என கருத்து நிலவுகிறது. காவல் நிலையம் என்றால் போலீசாரின் மறைமுக கோட்டையாக கருதப்படுகிறது. இந்த இரண்டும் மக்களுக்கான கோட்டை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நீதித்துறையும், காவல்துறையும் கைகோர்க்க வேண்டும். அப்படி கைகோர்த்தால் மக்களுக்கு நன்மை கிடைக்கும்.

தற்போது வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இதனால் மக்களுக்கு தான் பிரச்சினை ஏற்படுகிறது. வக்கீல்கள் தேவையில்லாமல் காவல் நிலையம் செல்லாதீர்கள், அப்படி சென்றால் நீங்கள் காவலர்களுக்கு தொல்லை கொடுக்காதீர்கள். வக்கீல்களும், போலீசாரும் சரியாக இருந்தால் தான் மக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

நேர் வழியில் வந்த பணம் நல்லது. தவறான வழியில் வந்த பணம் நிலையாக இருக்காது. தவறான தீர்ப்பு கொடுத்தால் இறைவன் சும்மா விடமாட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரச்சினை ஏற்படும். தற்போது சட்டம் படிக்கும்போதே காவல்துறையை எதிரி போன்று பார்க்கும் நிலை உருவாகி உள்ளது. அதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.

இளம் வக்கீல்கள் சட்டப்புத்தகங்களை அதிகம் படிக்க வேண்டும். முக்கியமான நீதிபதிகளின் தீர்ப்புகளை படிக்க வேண்டும். உங்களுக்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இளம் வக்கீல்களுக்கு நீதித்துறையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருக்கிறது. நீங்கள் நீதித்துறை மாண்பை பாதுகாக்க வேண்டும். அதற்கு உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி அனிதா சமந்த் பேசுகையில், “நீதித்துறை அனைத்து தரப்பு மக்களாலும் மதிக்கப்பட கூடிய துறை. அந்த துறையின் மதிப்பை வக்கீல்கள் காப்பாற்ற வேண்டும். தேவையில்லாமல் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. நம்மை நாடி வருபவர்களின் உரிமைகள் பாதிக்காதவாறு வாதாட வேண்டும். பொதுவாகவே வக்கீல்கள் அதிக அளவு சட்டப்புத்தகங்கள் படிக்க வேண்டும். அதில் உள்ள குறிப்புகளை எடுத்து வாதாட வேண்டும்“ என்றார்.

முடிவில், நெல்லை முதன்மை குற்றவியல் நீதிபதி ரவிசங்கர் நன்றி கூறினார்.

விழாவில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, நெல்லை மாவட்ட கலெக்டர் ‌ஷில்பா, நெல்லை மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் தீபக் டாமோர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகா‌‌ஷ் மீனா, நீதிபதிகள் அருள்முருகன், விஜயகாந்த், மோகன், இந்திராணி, பத்மா, நெல்லை வக்கீல் சங்க தலைவர் சிவசூரிய நாராயணன், செயலாளர் செந்தில்குமார் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

Next Story