பல்லடம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்


பல்லடம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்
x
தினத்தந்தி 24 Nov 2019 4:41 AM IST (Updated: 24 Nov 2019 4:41 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காமநாயக்கன்பாளையம்,

பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி சின்னூர் மற்றும் வருவாய் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 1000-க்கும் மேற்பட்டபொது மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் அந்தப்பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வரவில்லை, குடிநீருடன் சப்பை தண்ணீர் கலந்து வருகிறது.

இதனை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்லடம் - பொள்ளாச்சி மெயின் ரோட்டில் இருந்து சின்னூர் செல்லும் ரோட்டில் காலிக்குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், தாசில்தார் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் சமதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்து தினமும் 48 ஆயிரம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறினார்.

மேலும் 3 குடிநீர் தொட்டிகளுக்கு குடிநீரை பிரித்து அனுப்புவதால் குடிநீர் விரயமாகி 30ஆயிரம் லிட்டர் மட்டுமே கிடைப்பதாகவும் மேலும் மக்கள் தொகை அதிகரித்து விட்டதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் முறையாக வருகிறதா என்று பார்க்க மீட்டர் அமைத்து குடிநீர் பயன்படுத்தும் ஆய்வு செய்வதாகவும், மேலும் குடிநீர் திருட்டு ஏதேனும் நடைபெறுகிறதா என்று ஆய்வு செய்ய உள்ளதாகவும், மேலும் இந்த குடிநீர் பற்றாக்குறை பிரச்சினையை சரி செய்து வாரம் ஒரு முறை குடிநீர் வழங்கவும் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை சப்பை தண்ணீர் வழங்கவும் ஏற்பாடு செய்வதாக வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் சாலை மறியல் போராட்டம் நடத்தியவர்களிடம் கூறினார்.

இதனை மேற்கொண்டு பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story