ஒடிசாவில் கடத்தப்பட்ட சிறுமி தாம்பரம் அருகே மீட்பு வாலிபர் கைது
ஒடிசாவில் கடத்தப்பட்ட சிறுமி தாம்பரம் அருகே மீட்கப்பட்டார். இதையடுத்து சிறுமியை கடத்தியதாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வண்டலூர்,
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிஜேஷ் மாலிக் (வயது 22), இவர் அதே பகுதியில் உள்ள ஒரு மருத்துக்கடையில் அடிக்கடி மாத்திரை வாங்குவதற்காக செல்வார். அப்போது அந்த மருந்து கடை உரிமையாளரின் மகளான 13 வயது சிறுமியுடன் பிஜேஷ் மாலிக்குக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தை பயன்படுத்தி பிஜேஷ் மாலிக் கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி அந்த சிறுமியை ஓடிசாவில் இருந்து ரெயில் மூலம் தமிழ்நாட்டுக்கு கடத்தி வந்தார்.
பின்னர் தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் இடத்திற்கு அழைத்து சென்று அங்கேயே பிஜேஷ் மாலிக் கட்டிட வேலைகளை செய்து வந்தார்.
வலைவீச்சு
இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஒடிசா மாநிலத்திலுள்ள ராஜ்கனிகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்திய வாலிபரையும், சிறுமியையும் கடந்த 3 மாதமாக வலைவீசி தேடிவந்தனர். இந்தநிலையில் அந்த சிறுமி தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட வேலை நடைபெறும் இடத்தில் தங்கியிருப்பதாக ஒடிசா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து ஒடிசா போலீசார் நேற்று தாம்பரம் அடுத்த ஓட்டேரி போலீஸ் நிலையத்துக்கு வந்து நடந்த சம்பவங்களை ஓட்டேரி போலீசாரிடம் தெரிவித்தனர்.
கைது
இதனையடுத்து ஓட்டேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரதாப், போலீஸ்காரர்கள் பிரகாஷ், சாந்தகுமார், கங்காதரன் ஆகியோர் தலைமையில் ஒடிசா போலீசார் மண்ணிவாக்கம் அருகே சிறுமி தங்கியுள்ள கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது சிறுமியுடன் சிறுமியை கடத்தி வந்த வாலிபரும் அங்கு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிரடியாக போலீசார் சிறுமியை மீட்டனர். இதனையடுத்து சிறுமியை கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிஜேஷ் மாலிக்கை ஓட்டேரி போலீசார் கைது செய்து ஒடிசா போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் பிஜேஷ் மாலிக் மற்றும் அந்த சிறுமியை ஓடிசாவுக்கு அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story