மாணவர் சேர்க்கையை காரணம் கூறி அரசு பள்ளிகளை மூடினால் இலவச கல்வி சாத்தியம் இல்லை - ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
மாணவர் சேர்க்கையை காரணம் கூறி அரசு பள்ளிகளை மூடினால் இலவச கல்வி சாத்தியம் இல்லை என்று, திண்டுக்கல்லில் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில், அரசு பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி, திண்டுக்கல்லில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் பிரிட்டோ தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின்முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.
மேலும் ஆசிரியர்கள், மாணவர்கள் வடமதுரை அருகேயுள்ள சொட்டமாயனூர், சிறுமலை, தெத்துப்பட்டி, சாமியார்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர். அப்போது அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளை மாணவர் எண்ணிக்கையை காரணம் காட்டி மூடக்கூடாது. பள்ளிகள் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசின் கல்வி கொள்கையில், அனைத்து குழந்தைகளுக்கும் தரமான இலவச கட்டாய கல்வி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், 20 மாணவர்களுக்கு குறைவாக இருக்கும் அரசு பள்ளிகளை மூட வேண்டும் என்று கூறியிருக்கிறது. மேலும் 3 ஆண்டுகளுக்கு முன்பு நிதிஆயோக் அமைப்பின் அறிக்கையிலும், நாடு முழுவதும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால் தமிழ்நாட்டில் மட்டும் 3 ஆயிரத்து 400 பள்ளிகளை மூடும் நிலை ஏற்பட்டது. அதில் சில பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. அரசு பள்ளிகளை மூடிவிட்டால், இலவச கல்வி சாத்தியம் இல்லை. தனியார் பள்ளிகள் இலவச கல்வியை தராது. அரசு பள்ளிகள் செயல்பட்டால் தான், அனைவருக்கும் இலவச கல்வி சாத்தியம். எனவே, அரசு பள்ளிகளை மூடாமல், அவற்றை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பழங்குடியின குழந்தைகளுக்கு என்று தனியாக அரசு பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. கடந்த 2008-2009-ம் கல்வி ஆண்டில் 42 ஆயிரம் மாணவர்கள் படித்தனர். தற்போது அது 27 ஆயிரமாக குறைந்துள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 2 லட்சத்து 8 ஆயிரம் பேர் படித்தனர். அதுவும் 1 லட்சத்து 6 ஆயிரமாக குறைந்துள்ளது.
இதுதவிர திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் கடந்த 2007-2008-ம் கல்வி ஆண்டில் 45 ஆயிரத்து 342 பேர் படித்தனர். தற்போது 27 ஆயிரம் மாணவர்களே படிக்கின்றனர். இவ்வாறு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. ஆனால், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயருகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் கல்வி கொள்கையே காரணம்.
அரசு பள்ளிகளை மூடிவிட்டால், ஏழை மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி விடும். அரசு பள்ளிகளை மேம்படுத்த, தனியாரிடம் உதவி கேட்பது ஒருபுறம் இருந்தாலும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் கல்வி கொள்கையை, மாநில அரசு அப்படியே செயல்படுத்தக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story