கொடைக்கானல், கன்னிவாடி பகுதிகளில், தோட்டத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் - பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை


கொடைக்கானல், கன்னிவாடி பகுதிகளில், தோட்டத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் - பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 25 Nov 2019 4:30 AM IST (Updated: 24 Nov 2019 9:40 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல், கன்னிவாடி பகுதிகளில் தோட்டத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

கன்னிவாடி,

கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான கன்னிவாடி, ஆடலூர், பன்றிமலை, பண்ணைப்பட்டி உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. வாழை, தென்னை, மாங்காய் உள்ளிட்டவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. சமீபகாலமாக இந்த மலை கிராமங்களில் உள்ள தோட்டங்களுக்கு வன விலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வன விலங்குகளை வெடி வெடித்து காட்டுக்குள் விரட்டினாலும், அவை மீண்டும் தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கன்னிவாடி பகுதியில் 7 காட்டு யானைகள், 1 குட்டியுடன் உலா வந்தன. இதனால் அவற்றை காட்டுப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கன்னிவாடி பண்ணைப்பட்டியில் உள்ள தோட்டங்களுக்குள் 3 காட்டு யானைகள், 1 குட்டியுடன் புகுந்தன. அவை, அங்குள்ள சத்தியமூர்த்தி என்பவருக்கும் சொந்தமான தோட்டத்தில் இருந்த வாழைகளை சேதப்படுத்தின. இதையடுத்து மணி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் புகுந்த யானைகள், தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தன. மேலும் அதன் அருகில் இருந்த மற்றொரு தோட்டத்திற்குள் புகுந்து வாழைகளையும், மா மரத்தையும் சேதப்படுத்தின. இதுதவிர பூபதி என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் புகுந்த யானைகள், அங்கு பயிரிடப்பட்டிருந்த சோளப்பயிர்களையும் சேதப்படுத்தின. ஏற்கனவே விவசாயி சத்தியமூர்த்தி தனது தோட்டத்தை சுற்றிலும் முள்வேலி அமைத்திருந்தார். ஆனால் வேலியை உடைத்து உள்ளே புகுந்து யானைகள் அட்டகாசம் செய்துள்ளன.

இதற்கிடையே நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் சத்தியமூர்த்தி, மணி, பூபதி உள்ளிட்டோர் பயிர்கள் சேதமாகி கிடந்ததை பார்த்து வேதனை அடைந்தனர். எனவே அட்டகாசம் செய்யும் யானைகளை காட்டுப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பண்ணைப்பட்டியில் முகாமிட்டுள்ள யானைகளை காட்டிற்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் யானைகள் அங்கு முகாமிட்டுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

இதேபோல் கொடைக்கானல் அருகே மனவயலில் உள்ள ரவி என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ஒன்று புகுந்து, அங்கிருந்த வாழைகளையும், பீன்ஸ் பயிர்களையும் சேதப்படுத்தியது. இதற்கிடையே யானை நடமாட்டம் தெரிந்தவுடன் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சத்தம் போட்டு அதனை வனப்பகுதிக்குள் விரட்டினர். மேலும் காட்டு யானை புகுந்தது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தினசரி அப்பகுதியில் முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி வரும் யானைகளை நிரந்தரமாக விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவற்றால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story