வடுவூர் அருகே விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் அமைச்சர் காமராஜ் வழங்கினார்


வடுவூர் அருகே விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் அமைச்சர் காமராஜ் வழங்கினார்
x
தினத்தந்தி 24 Nov 2019 11:00 PM GMT (Updated: 24 Nov 2019 5:35 PM GMT)

வடுவூர் அருகே அரசு விதைப்பண்ணையில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்களை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

வடுவூர்,

திருவாரூர் மாவட்டம், வடுவூர் அருகே உள்ள காஞ்சிக்குடிக்காடு வேளாண் அரசு விதைப்பண்ணையில் வேளாண்மைத்துறை சார்பில் கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது. விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு ரூ.49 லட்சம் மதிப்பிலான கட்டிடங்களை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் 71 விவசாயிகளுக்கு ரூ.70 லட்சத்து 41 ஆயிரத்து 164 மதிப்பிலான இடுபொருட்கள் உள்ளிட்ட வேளாண் எந்திரங்களை, ரூ.34 லட்சத்து 56 ஆயிரத்து 447 மானிய விலையில் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

குறுவை தொகுப்பு திட்டம்

திருவாரூர் மாவட்டமானது விவசாயத்தை அடிப்படையாக கொண்ட மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் விவசாயிகளை பாதுகாக்கின்ற வகையில் வறட்சிக்கு நிவாரணம், சம்பா சிறப்பு தொகுப்பு, குறுவை தொகுப்பு, உழவுக்கு மானியம் என விவசாயம் சார்ந்த பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 2018-19-ம் ஆண்டு குறுவை சாகுபடியினை ஊக்குவிக்கும் விதமாக ரூ.1,835 லட்சம் மதிப்பில் குறுவை தொகுப்பு திட்டம் வழங்கப்பட்டது.

மேலும் நடப்பாண்டில் சம்பா பருவத்தில் 3 லட்சத்து 72 ஆயிரத்து 500 ஏக்கர் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு, இதுவரை 1 லட்சத்து 81 ஆயிரத்து 620 ஏக்கர் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது. தாளடி 56 ஆயிரத்து 910 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு 1 லட்சத்து 34 ஆயிரத்து 195 ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ளது.

மானியம்

தமிழக முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள உழவு மானிய திட்டத்தின்கீழ் மாநிலத்திற்கு 5 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.30 கோடி நிதியில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்திற்கு 1 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.10 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 48 ஆயிரத்து 477 விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் அம்பேத்கர், மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியக்கோட்டி, முன்னாள் நகரசபை தலைவர் சிவ.ராஜமாணிக்கம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அரிகிரு‌‌ஷ்ணன், வேளாண்மை உதவி இயக்குனர்கள் தேவேந்திரன், ஹேமா, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர்கள் ராஜாரமே‌‌ஷ், ராமசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story