மதுரையில் சம்பவம்: டிக்-டாக் மூலம் விலைமாதுகளாக சித்தரிக்கப்பட்ட 2 இளம்பெண்கள் - வாழ்க்கையை தொலைத்த பரிதாபம்
மதுரையில் டிக்-டாக் மூலம் விலைமாதுகளாக சித்தரிக்கப்பட்ட 2 இளம்பெண்கள் வாழ்க்கையையே தொலைத்து விட்டு தனியாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்போன் டிக்-டாக் செயலி மூலம் பழக்கமாயினர். இவர்கள் இருவருக்கும் வயது 25. திருமணமாகி விட்டது.
இவர்கள் இவரும் நாட்கள் செல்ல, செல்ல இணைபிரியா தோழிகளாக மாறினர். இருவரும் சேர்ந்து டிக்-டாக்கில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். டிக்-டாக் செயலிக்கு அடிமையானதால் அவர்களின் கணவர்களிடம் இருந்து பிரிந்து தற்போது அவரவர் பெற்றோர் வீட்டில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும், தங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆன்மிகம், நையாண்டி, நகைச்சுவை போன்ற பல வீடியோக்களை டிக்-டாக் செயலி மூலம் பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில், அவர்கள் இவருக்கும், தேனியை சேர்ந்த சுகந்தி (26) என்ற பெண்ணுடன் டிக்-டாக் மூலம் நட்பு ஏற்பட்டது. சுகந்தியும் தனது நண்பரான செல்வம்(27) என்பவருடன் இணைந்து பல்வேறு வீடியோக்களை டிக்-டாக்கில் பதிவிட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் சுகந்திக்கும், மேற்கண்ட 2 இளம்பெண்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு டிக்-டாக் செயலியில் நட்பை துண்டித்து கொண்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த சுகந்தி, தனது நண்பர் செல்வத்துடன் சேர்ந்து அந்த 2 இளம்பெண்களின் டிக்-டாக் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து, இருவரையும் விலைமாதுகளாக சித்தரித்து டிக்-டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு விட்டாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இருவரும் ஒத்தக்கடை போலீசிலும், மதுரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம், சுகந்தி மற்றும் அவரது நண்பர் செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே, போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க அவர்கள் இருவரும் சேர்ந்து முன் ஜாமீன் பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து, சுகந்தியிடம் இருந்த 2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
டிக்-டாக் செயலிக்கு அடிமையான 2 இளம்பெண்கள் மற்றும் சுகந்தி ஆகிய 3 பெண்களுமே டிக்-டாக் செயலியால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தங்களது கணவர்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மற்றொரு சம்பவமாக மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவி டிக்-டாக்கில் பதிவிட்ட வீடியோக்களை தவறாக சித்தரித்து, ஆபாசமான வீடியோவாக பதிவிட்டதாக பொள்ளாச்சியை சேர்ந்த பூபதி(28) என்பவரை ஒத்தக்கடை போலீசார் கைது செய்துள்ளனர்.
குடும்பப் பெண்கள், மாணவிகள் பலர் பொழுதுபோக்கு என்ற பெயரில் முழுநேர டிக்-டாக் அடிமைகளாகி தங்களது வாழ்க்கையையே தொலைத்து வருவது தற்போது அதிகரித்து வருகிறது.
எனவே இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் செல்போன்களை பயனுள்ள வகைகளில் பயன்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
Related Tags :
Next Story