கோவையில் துணிகரம்: ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற வாலிபர் கைது
கோவையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கணபதி,
ஐதராபாத்தில் உள்ள சென்டிரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று அதிகாலை 1 மணிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் கோவை- சத்திரோடு அத்திப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம். எந்திரத்தை ஒரு ஆசாமி உடைத்துக் கொண்டு இருக்கிறார். அவரை உடனே சென்று மடக்கி பிடியுங்கள் என்று வங்கியின் பாதுகாப்பு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
உடனே கோவை கட்டுப்பாட்டு அறை போலீசார் அந்த பகுதியில் ரோந்து சுற்றி வந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், அந்த ஏ.டி.எம். மையத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அந்த ஏ.டி.எம். மையத்திற்குள் ஒரு நபர் தலையில் போர்வையை போர்த்திக் கொண்டு நின்றிருந்தார். அவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
இதில், அவர், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 28) என்பதும், அவர் கடந்த சில மாதங்களாக ஏ.டி.எம். மையத்துக்கு பின்னால் உள்ள கட்டிடத்தில் தங்கி கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இருக்கும் பகுதியை உடைத்து திருட முயற்சித்ததை ஒப்புக் கொண்டார். இது குறித்து சரவணம்பட்டி குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா வழக்கு பதிவு செய்த ஜெயக்குமாரை கைது செய்தார்.
இது குறித்து சரவணம்பட்டி போலீசார் கூறியதாவது:-
சரவணம்பட்டியில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இருக்கும் பகுதியை உடைத்து அந்த வாலிபர் பணத்தை திருட முயன்றார். அந்த எந்திரத்தில் பணம் எடுக்கும் முன்பகுதியை தவிர வேறு பகுதியில் தொட்டாலே அந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் அலாரம் ஒலிக்கும். ஆனால் ஏ.டி.எம். மையத்தில் அலாரம் ஒலிக்காது. எனவே தான் அங்கு அலாரம் ஒலித்த உடன் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த பணத்தை திருடுபவர்கள் யாருக்கும் தெரியாது என்று நினைத்து தங்கள் கைவரிசையை காட்டும் போது சிக்கிக்கொள்வார்கள். இது போல் தற்போது போலீசாரிடம் சிக்கிய வாலிபர் கண்காணிப்பு கேமராவில் தன் முகம் தெரியக்கூடாது என்பதற்காக தலையை போர்வையால் போர்த்தியிருந்தார். ஆனால் அவர் ஏ.டி.எம். எந்திரத்தின் பின்புறத்தில் கைவைத்த போது ஐதராபாத்தில் அலாரம் ஒலித்ததால் போலீசில் சிக்கி கைதாகி விட்டார்.
இவ்வாறு போலீசார் கூறினார்கள்.
Related Tags :
Next Story