சுருளி அருவியில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்
சுருளி அருவியில் குளிப்பதற்கு அய்யப்ப பக்தர்கள் ஏராளமானவர்கள் நேற்று குவிந்தனர்.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சுற்றுலா தலமாகவும், புண்ணிய தலமாகவும் சுருளி அருவி விளங்குகிறது. அருவிக்கு ஹைவேவிஸ் மலை பகுதியில் உள்ள தூவானம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் வருகிறது. சுருளி அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேனி மாவட்டம் வழியாக பல்வேறு வாகனங்களில் சென்று வருகின்றனர். கார்த்திகை மாதம் 1-ந்தேதி முதல் சபரிமலை அய்யப்பன் கோவிலிலுக்கு பக்தர்கள் வரத்தொடங்கி உள்ளனர்.
அவர்கள் சபரிமலைக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பும்போது சுருளி அருவியில் வந்து குளிக்கின்றனர். பின்னர் சுருளி வேலப்பர் கோவில், விபூதிகுகை கோவில், பூதநாரயணன் கோவில், ஆதிஅண்ணாமலையார் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்நிலையில் நேற்று சுருளி அருவியில் குளிப்பதற்கு அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரித்தது.
அருவியில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அருவி பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story