பாப்பிரெட்டிப்பட்டி அருகே மர்ம விலங்கு கடித்து 15 ஆடுகள் செத்தன பொதுமக்கள் பீதி


பாப்பிரெட்டிப்பட்டி அருகே மர்ம விலங்கு கடித்து 15 ஆடுகள் செத்தன பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 25 Nov 2019 4:00 AM IST (Updated: 25 Nov 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மர்ம விலங்கு கடித்து 15 ஆடுகள், 10 கோழிகள் செத்தன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தமானிக்கோம்பை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராமன். விவசாயியான இவர் ஆடுகள் மற்றும் கோழிகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இவர் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்ட பின்னர் மாலை வீட்டுக்கு அருகில் உள்ள கொட்டகையில் கட்டி வைத்து இருந்தார். இந்த கொட்டகையில் 20-க்கும் மேற்பட்ட கோழிகளையும் அடைத்து வைத்து இருந்தார்.

இந்தநிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு ராமன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் எழுந்து சென்று பார்த்தனர். அப்போது கொட்டகையில் அடைத்து வைத்திருந்த 15 ஆடுகள் செத்து கிடந்தன. 3 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தன. மேலும் 10 கோழிகளும் செத்து கிடந்தன. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதுகுறித்து வனத்துறை, வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

அதன்பேரில் வனச்சரகர் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் கலையரசன், கிராம நிர்வாக அலுவலர் குமார் மற்றும் போலீசார், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது மர்ம விலங்கு கடித்து குதறியதில் ஆடுகள், கோழிகள் செத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கால்நடை டாக்டர் ராமமூர்த்தி மூலம் ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தனர். இதுதொடர்பாக வனத்துறையினர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம விலங்கு கடித்து ஆடுகள், கோழிகள் செத்ததால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதையடுத்து வனத்துறையினர் மர்ம விலங்கின் நடமாட்டம் குறித்து அந்த பகுதியில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Next Story