சிறப்பு வகுப்புக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொந்தரவு பள்ளி தாளாளருக்கு வலைவீச்சு


சிறப்பு வகுப்புக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொந்தரவு பள்ளி தாளாளருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Nov 2019 3:45 AM IST (Updated: 25 Nov 2019 2:20 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில், சிறப்பு பயிற்சி வகுப்புக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் பள்ளி தாளாளரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஓசூர்,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ராயக்கோட்டை சாலையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தாளாளராக 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் உள்ளார். இந்த பள்ளியில் நடத்தப்படும் சிறப்பு வகுப்பிற்கு மற்ற தனியார் பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை இப்பள்ளியில் நடந்த கையெழுத்து பயிற்சி தொடர்பான சிறப்பு வகுப்பிற்கு, மற்றொரு தனியார் பள்ளியில் படித்து வரும் 10 வயது 5-ம் வகுப்பு மாணவி வந்தார். அவர் பள்ளி தாளாளரிடம் சென்று கையெழுத்து பெற சென்றார். அப்போது அந்த மாணவிக்கு, அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

தாளாளர் தலைமறைவு

மாணவியின் அலறல் சத்தம் கேட்டு, சக மாணவ, மாணவிகள் மற்றும் அதே பள்ளியில் ஜோதிடம் தொடர்பாக நடந்த சிறப்பு வகுப்பில் பங்கேற்றிருந்த பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை அங்கு ஓடி வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தாளாளர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக மாணவியிடம் பள்ளியில் இருந்தவர்கள் கேட்டனர். அதில் தாளாளர், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவம் நடந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள தனியார் பள்ளி தாளாளரை வலைவீசி தேடி வருகின்றனர். சிறப்பு வகுப்புக்கு சென்ற மாணவிக்கு, தனியார் பள்ளி தாளாளர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story