சேலத்தில் குழந்தையை கொஞ்சுவது போல் நடித்து நகை அபேஸ் பெண்ணுக்கு போலீசார் வலைவீச்சு


சேலத்தில் குழந்தையை கொஞ்சுவது போல் நடித்து நகை அபேஸ் பெண்ணுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Nov 2019 4:30 AM IST (Updated: 25 Nov 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் குழந்தையை கொஞ்சுவது போல் நடித்து நகையை அபேஸ் செய்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்,

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவருடைய மனைவி மேனகா. இவர்களது மகன் சிவாஸ் (வயது 2). சம்பவத்தன்று இரவு மேனகா மகனை தூக்கிக்கொண்டு சாமி கும்பிடுவதற்காக அங்குள்ள ஒரு கோவிலுக்கு சென்றார். பின்னர் குழந்தையை அங்கு உட்கார வைத்து விட்டு, கோவிலில் விளக்கேற்றினார்.

அப்போது அவரிடம் ஒரு பெண் நைசாக வந்து பேச்சு கொடுத்தார். பின்னர் சிவாசை தூக்கி கொஞ்சினார். இதை பார்த்த மேனகா குழந்தையை, அந்த பெண் கொஞ்சிக்கொண்டு தான் இருக்கிறார் என நினைத்துக்கொண்டு கோவிலில் சூடம் ஏற்றி சாமி கும்பிட்டார். இதற்கிடையே அந்த பெண் திடீரென குழந்தை சிவாசை விட்டு, விட்டு அங்கிருந்து சென்று விட்டார். சாமி கும்பிட்டு விட்டு வந்த மேனகா தனது குழந்தையை தூக்கினார். அப்போது குழந்தை கழுத்தில் அணிந்திருந்த ½ பவுன் நகை காணாமல் போனதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

நகை அபேஸ்

அப்போது குழந்தையை கொஞ்சுவது போல் நடித்து அந்த பெண் நகையை அபேஸ் செய்தது தெரிய வந்தது. அதன் பின்னர் மேனகா, அந்த பெண்ணை கோவிலில் தேடி பார்த்தார். ஆனால் அந்த பெண் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. இது குறித்து மேனகா அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில் பெண் ஒருவர் குழந்தையை தூக்கி கொஞ்சுவதும், பின்னர் குழந்தை கழுத்தில் அணிந்திருந்த நகையை அபேஸ் செய்வதும் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையிடம் நகையை அபேஸ் செய்த பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story