திருப்பூர் டவுன்ஹாலில் வேருடன் தோண்டி எடுக்கப்பட்ட அரசமரம் மறுநடவு செய்ய கோவைக்கு கொண்டு செல்லப்பட்டது


திருப்பூர் டவுன்ஹாலில் வேருடன் தோண்டி எடுக்கப்பட்ட அரசமரம் மறுநடவு செய்ய கோவைக்கு கொண்டு செல்லப்பட்டது
x
தினத்தந்தி 25 Nov 2019 4:15 AM IST (Updated: 25 Nov 2019 3:26 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் டவுன்ஹாலில் இருந்த அரச மரம் வேருடன் தோண்டி எடுக்கப்பட்டது. அந்த மரம் மறுநடவு செய்வதற்காக திருப்பூரில் இருந்து லாரியில் கோவைக்கு கொண்டு செல்லப்பட்டது.

திருப்பூர்,

மத்திய அரசு நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் வளர்ச்சியை மேம்படுத்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதில் தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு நகரங்கள் தோ்வு செய்யப்பட்டு வளா்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூரில் உள்ள பழைய பஸ் நிலையம் புதுப்பித்தல், தென்னம்பாளையம் மார்க்கெட் பகுதியில் வணிக வளாகம் அமைத்தல், திருப்பூர் டவுன்ஹாலில் நவீன கருத்தரங்க கூடம் அமைத்தல் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அதில் திருப்பூர் டவுன்ஹாலில் இருந்த கட்டிடம் இடிக்கப்பட்டு நவீன கருத்தரங்க கூடம் கட்டுவதற்கு முதல்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது.

மறுநடவு

இதனால் அந்த வளாகத்தில் உள்ள மரங்கள் வெட்டப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் பல மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. அந்த வளாகத்தில் நிற்கும் அரச மரத்தை வெட்ட கூடாது என்று சமூக நல ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் வளர்ச்சி பணிகளுக்கு இடையூறு ஏற்படும் என்று கூறி மாநகராட்சி நிர்வாகம் மரத்தை அகற்ற முடிவு செய்தது. மேலும் மரத்தை வேருடன் தோண்டி எடுத்து வேறு பகுதியில் மறுநடவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்தது.

இதை அறிந்த கோவையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் அரச மரத்தை தங்கள் பகுதியில் மறுநடவு செய்ய விருப்பம் தெரிவித்தது. இதற்கு மாநகராட்சி சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து நேற்று காலை அரச மரத்தை வேருடன் தோண்டி எடுக்கும் பணி பல மணி நேரமாக நடைபெற்றது. பின்னர் பகல் 2 மணிக்கு அரச மரம் 2 கிரேன்கள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டது. பின்னர் லாரி மூலம் அரச மரம் கோவைக்கு கொண்டு செல்லப்பட்டது.


Next Story