மேலவளவு கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை, முன்கூட்டியே விடுதலை செய்ய பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு
மேலவளவு ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 7 பேரை கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு அளித்தனர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி மனுக்கள் வழங்கினார். கூட்டத்தில் மொத்தம் 464 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி துரித நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில், ஆண்டிப்பட்டி தாலுகா மேக்கிழார்பட்டியை சேர்ந்த 114 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை கலெக்டர் வழங்கினார். இந்த பட்டா பெற்ற மக்களுக்கு ஏற்கனவே 17 ஆண்டுகளுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், அவர்களுக்கு நிலம் அளவீடு செய்து கொடுக்கப்படவில்லை. பின்னர் அந்த பட்டாவை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. இதையடுத்து தங்களுக்கு மீண்டும் பட்டா வழங்க வேண்டும் என்றும், நிலம் ஒதுக்கப்பட்ட பகுதியில் பயனாளிகளுக்கு உரிய நிலத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என்றும் கடந்த 2 ஆண்டுகளாக இந்த கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர். தற்போது நிலம் அளவீடு செய்யப்பட்டு, பட்டா வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மகிழ்ச்சியுடன் மக்கள் பட்டாவை பெற்றுச் சென்றனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் மனு அளித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் நாகரத்தினம், தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த 1997-ம் ஆண்டு மதுரை மாவட்டம் மேலவளவு கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் என்பவர் உள்பட 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்தபோது சுப்ரீம் கோர்ட்டு இந்த தண்டனையை உறுதி செய்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் 13 பேரை நன்னடத்தையின் அடிப்படையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்ய தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. எனவே, அனைவரையும் விடுதலை செய்யும் அரசாணையை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உப்புக்கோட்டையை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அளித்த மனுவில், ‘எங்கள் ஊரில் இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடம் இல்லை. இதனால் ராணுவ பணி, போலீஸ் பணிக்கு செல்வதற்கு பயிற்சி எடுக்க தேனிக்கு வர வேண்டி உள்ளது. எனவே, எங்கள் ஊரில் விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் உள்ள அனுகிரஹா நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், ‘ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியகுளம் சாலையில் இருந்து அழகர்கோவில் செல்லும் சாலை குறுகியதாக உள்ளது. இதனால் விபத்து அபாயம் உள்ளது. எனவே, இந்த சாலையை விரிவுபடுத்த வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story