2-வது நாளாக அட்டகாசம்: வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டுயானைகள்


2-வது நாளாக அட்டகாசம்: வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டுயானைகள்
x
தினத்தந்தி 26 Nov 2019 4:00 AM IST (Updated: 25 Nov 2019 10:37 PM IST)
t-max-icont-min-icon

கன்னிவாடி அருகே காட்டுயானைகள் முகாமிட்டு வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தின.

கன்னிவாடி, 

கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான கன்னிவாடி, ஆடலூர், பன்றிமலை, பண்ணைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. வாழை, தென்னை, மா உள்ளிட்டவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

சமீபகாலமாக, இந்த மலை கிராமங்களில் காட்டுயானைகள் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப் படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கிடையே குட்டியுடன் 7 காட்டுயானைகள் கூட்டமாக அப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இதனை விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த 23-ந் தேதி இரவு கன்னிவாடி அருகே பண்ணைப்பட்டியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.

2-வது நாளாக நேற்று முன்தினம் இரவு காட்டுயானைகள் பண்ணைப்பட்டியை அடுத்த கருப்பன்சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த செந்தில் என்பவரின் தோட்டத்துக்குள் புகுந்தன. அங்கு குலை தள்ளிய நிலையில் இருந்த வாழை மரங்களை சேதப்படுத்தின.

வாழைத்தண்டுகளை உரித்து காட்டுயானைகள் தின்றன. மேலும் வெள்ளைச்சாமி என்பவருடைய தோட்டத்தில் இருந்த 14 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி வீசன. அதிகாலை வரை முகாமிட்டு இருந்த காட்டுயானைகள் பின்னர் தானாக வனப்பகுதிக்குள் சென்றன.

காட்டுயானைகள் சேதப்படுத்தியதில் பலத்த ந‌‌ஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் யானைகள் முகாமிட்டு அட்டகாசம் செய்து வருவதால், விவசாயிகள் தோட்டத்துக்கு செல்ல அச்சம் அடைந்துள்ளனர். எனவே காட்டுயானைகள் அட்டகாசத்தை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் பெரும்பாறை அருகே உள்ள பெரியூர், நல்லூர்காடு பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்குள் நேற்று முன்தினம் காட்டுயானைகள் புகுந்தன. பின்னர் அங்குள்ள சுப்பிரமணி, லோகநாதன் ஆகியோரின் தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த காபி, வாழை, சவ்சவ், அவரை, பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின. மேலும் அப்பகுதிலேயே காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் பெரியூர், நல்லூர்காடு பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டுயானைகளை பட்டாசு வெடித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story