தோட்ட தொழிலாளர்களுக்கு கூடுதல் கூலி கொடுக்க கோரி மாவோயிஸ்டுகள் போஸ்டர் - தமிழக-கேரள எல்லையில் பரபரப்பு
தோட்ட தொழிலாளர்களுக்கு கூடுதல் கூலி கொடுக்ககோரி தமிழக-கேரள எல்லையில் மாவோயிஸ்டுகள் போஸ்டர் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூடலூர்,
கேரள மாநிலம் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளது. அந்த வனப்பகுதிகளில் அவ்வப்போது கேரள தண்டர்போல்ட் போலீசார் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். கேரள வனப்பகுதியில் இருந்து தமிழக எல்லையில் உள்ள நீலகிரி வனப்பகுதிக்குள் மாவோயிஸ்டுகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது. இதையொட்டி தமிழக நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நிலம் பூர்படகா வனப்பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ந்தேதி பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் மீது கேரள தண்டர்போல்ட் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் அஜிதா, குப்புதேவராஜ் ஆகியோர் கொல்லப்பட்டனர். மீதமுள்ளவர்கள் தப்பி ஓடினர். அதைத்தொடர்ந்து வைத்திரியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஜலீல் என்ற மாவோயிஸ்டு சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் கேரள மாநிலம் பாலக்காடு அருகே அட்டப்பாடி வனப்பகுதியில் ஆயுத பயிற்சி மேற்கொண்ட 4 மாவோயிஸ்டுகள் கடந்த மாதம் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தப்பி ஓடிய மாவோயிஸ்டு பயிற்சி தலைவன் தீபக் தமிழக அதிரடிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு, சத்தீஷ்கார் மாநில போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார். இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளால் மாவோயிஸ்டுகள் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதையொட்டி தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தமிழக-கேரள எல்லையில் கூடலூர் அருகே முண்டக்கை வனப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மாவோயிஸ்டுகள் நுழைந்து உள்ளனர். பின்னர் அவர்கள் தமிழ், மலையாள மொழியில் போஸ்டர்களில் வாசகங்களை எழுதி, அவற்றை அப்பகுதி முழுவதும் ஒட்டினர். பின்னர் அங்கிருந்து சென்றனர். அந்த போஸ்டர்களில், ‘தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.800 வழங்க வேண்டும். மேலும் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
தோட்ட முதலாளிகளுக்கும், கேரள முதல்-மந்திரிக்கும் இடையேஉள்ள கூட்டுசதியை புரிந்துகொள்ளுங்கள். பெரிய எஸ்டேட்டுகளை பிரித்து நிலம் இல்லாத ஏழைகளுக்கு வழங்க வேண்டும். போராடுவோம், போராட துணிவோம். இப்படிக்கு நாடு காணி வட்டார குழு மாவோயிஸ்டுகள்’ என்று எழுதப்பட்டு உள்ளது.
இதை பார்த்த பொதுமக்கள் கேரள மற்றும் கூடலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில்போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தங்கள் மீது கேரள தண்டர்போல்ட்போலீசார் தாக்குதல் நடத்தினாலும்,மாவோயிஸ்டு இயக்கம் வனப்பகுதியில் வலுவுடன் இயங்கி வருவதை சுட்டிக்காட்டுவதற்காகவே இதுபோன்ற போஸ்டர்களை மாவோயிஸ்டுகள் ஒட்டிஉள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழக-கேரள எல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story